(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவு கையாளும் நிறுவனங்களின் ஊடாக பொதுமக்களுக்கு தரமான மற்றும் சுத்தமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உணவு கையாளும் நிறுவனங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டன.
இதன்போது உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியத்தை கொண்டிருந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உணவு தயாரிப்பதற்கு பொருத்தமற்ற பாத்திரங்களும் இஞ்சியை ஒத்த வேர்க்கிழங்கும் கைப்பற்றப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அத்துடன் உணவகங்களை சுத்தமாக வைத்திருத்தல், உணவு வகைகளை முறையாக கையாளுதல், உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் நீண்ட நாட்களுக்கு தேக்கி வைக்காதிருத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கத் தேவையான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உட்பட கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments: