
IPL T20 கிரிக்கெட் தொடரில் இன்று (28) இரவு 7.30மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் அடுத்தடுத்து இருதோல்விகளை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள CSK 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.
தனது கோட்டையான சேப்பாக்கத்தில் கடந்த ஆட்டத்தில் 210 ஓட்டங்களை குவித்த போதிலும் CSK அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக CSK சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதேவேளையில் நடப்பு சீசனில் இரு ஆட்டங்களில் 277 மற்றும் 288 ஓட்டங்கள் வேட்டையாடிய பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தனது கடைசி ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகளை குவித்து பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
No comments: