நூருல் ஹுதா உமர்
பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டு அந்த நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஷகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த சுற்றிவளைப்பின் போது தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு எவ்வித அரச அங்கீகாரமுமின்றி இயங்கிவந்த மருத்துவ நிலையமும், அழகுக்கலை நிலையமும், பயற்சி நிலையமும் நடத்தி வந்த நபர் இணங்காணப்பட்டதுடன் அவரிடமிருந்த மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகளும் கைப்பற்றப்பட்டது. மட்டுமின்றி முறையான கல்வித்தகமையோ, தொழில்தகைமையோ இல்லாத குறித்த நபர் மருத்துவ பரிந்துரைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத மருந்துகளை பாவித்து வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டதுடன் அவர் மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திய சான்றுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
கல்முனை மாநகர பிரதேசத்தில் மூன்று கிளைகளைக் கொண்டு இயங்கிய இந்த நிலையம் மனித உயிர்களுக்கும், சுகாதார நிலைக்கும் சவால் விடும் வகையில் இயங்கி வந்தமையை கண்டறிந்து இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை சுதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் சுற்றிவளைப்பில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை பிராந்திய சுற்றாடல் உணவு பாதுகாப்பு பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌஸாத், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்சத் காரியப்பர், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராசா, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான ஏ.எம்.பாறுக், ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஜே.எம். நஜிமுதீன், ஐ.எல்.எம்.இத்ரீஸ் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: