
காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுதலை செய்ய மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனையில் சட்ட விரோதமாக ஒன்று கூடிய குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேர் இன்று(01) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான நபரான ஸஹ்றான் ஹாசிமுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நாலு பேர் உள்ளடங்கியிருந்தனர்.
அதனையடுத்து ஐ.எஸ் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்குடன் அவர்கள் சதித்திட்டமொன்றை தீட்டும் நோக்கில் ஒன்று கூடியிருந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
எனினும் கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தகர்கள், இளைஞர்கள் அடங்குவதாகவும் போன்ற அப்பாவிப் பொதுமக்களே அதிகமாக உள்ளடங்கியிருந்தனர்.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவில் ஒன்று கூடி பொழுது போக்குக்குக்காக 304 எனப்படும் அட்டைக்கட்டு (கார்ட் பேப்பர் விளையாட்டு) விளையாடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இரவு ஒன்று கூடி விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்ததாக சுயாதீன விசாரணைகள் உறுதிப்படுத்தியிருந்தன.
அரச புலனாய்வுச் சேவை, தேசிய புலனாய்வு பணியகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பின் தீவிர விசாரணையின் பின்னர், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய பொலிஸார், சந்தேக நபர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதவான், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments: