News Just In

3/27/2024 08:55:00 AM

நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது - எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு தொடர்பில் அரசாங்கம் விசனம்



பாடசாலைகளுக்கு நன்கொடைகளை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. எனது தேர்தல் தொகுதியான ஹோமாகமையிலுள்ள பாடசாலையொன்றுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வழங்கிய நன்கொடை அந்த தொகுதியை வெட்கப்படச் செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாடசாலைகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்று சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு எவரொருவருக்கும் நன்கொடைகளை வழங்க முடியும். எவ்வாறிருப்பினும் அதனை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்ய முடியாது.

அதே போன்று அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளில் கூட்டங்கள் நடத்தப்படுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்ற தீர்மானித்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அவ்வாறிருக்கையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நான் அபிவிருத்திக் குழு தலைவராகவுள்ள ஹோமாகம தொகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்கு விஜயம் மேற்கொண்டு ஒரு மில்லியன் பெறுமதியான நவீன வகுப்பறையை வழங்கி, கூட்டமொன்றை நடத்தியுள்ளதாக அறியக்கிடைத்தது. அது எமது தேர்தல் தொகுதிக்கு ஏற்படுத்தப்பட்ட வெட்கச் செயல் என்று நான் கருதுகின்றேன் என்றார்

No comments: