News Just In

2/04/2024 02:27:00 PM

மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற திருகோணமலை மக்களை அச்சுறுத்தி திருப்பியனுப்பிய பொலிஸார்



ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருகோணமலையில் இருந்து சென்றவர்கள் வெருகல் பாலத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர், திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் அக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒரு தரப்பினர் திருகோணமலையில் இருந்து பேருந்தில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வெருகல் பாலத்தில் உள்ள பொலிஸ் சேதனைச்சாவடியில் வைத்து காலை 7.45 மணியளவில் அந்த பேருந்தை வழிமறித்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர், அவர்களிடம் பேருந்து கட்டணத்துக்கான டிக்கட்டுக்களை கேட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறக்கி, பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அத்துடன், பேருந்தையும் சோதனைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்துக்காக அவர்கள் கொண்டு சென்ற பதாதைகள் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

அதன் பின்னர், அனைவரது விபரங்களையும் பெற்றதோடு, பேருந்து சாரதி மற்றும் நடத்துநரின் ஆவணங்களையும் பறித்து, அவ்விடத்தை மீறிச் சென்றால் வழக்கு தாக்கல் செய்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வேளை, புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கைப்பேசியை வாங்கி, ஆதாரமாக எடுக்கப்பட்ட படங்கள் முதலான அனைத்தையும் அழித்துவிட்டு, கைப்பேசியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர், குறித்த பேருந்து மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் அந்த பேருந்தில் பயணித்துள்ளனர்; அவர்களில் 43 பெண்கள், 10 ஆண்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments: