(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மகாவலி கங்கை பெருக்கெடுத்துப் பாய்வதால் மன்னம்பிட்டி கல்லளை பகுதியில் வெள்ளம் பரவுகிறது. இதனால் மீண்டும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை, உடனடியாக போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதாக பொலொன்னறுவை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
மன்னம்பிட்டிப் பகுதியில் மட்டக்களப்பு – கொழும்பு நெஞ்சாலையைக் குறுக்கறுத்து சுமார் ஒரு அடிக்கு மேல் வெள்ளநீர் வேகமாகப் பாய்வதால் புதன்கிழமை 10.01.2024 பகலில் இருந்து மறு அறிவித்தல் வரும்வரை வீதி போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பயணிகளும் வாக ஓட்டிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
கொழும்பிலிருந்தும் ஏனைய இடங்களிலிருந்தும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கிரித்தலே, எலஹெர, பகமுனை, தெஹிஅத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் ஏற்கெனவே கடந்த 29ஆம் திகதி முதல் திறக்கப்பட்டு சில தினங்கள் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சுமார் ஒரு வாரமளிவில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் அடை மழை பெய்யத் துவங்கியுள்ளதால் மகாவலி கங்கையும் பெருக்கெடுத்த நிலையில் மீண்டும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை கடந்த 29ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரமாக போக்குவரத்திற்குத் தடைசெய்யப்பட்டிருந்ததால் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கட்டுநாயக்கா, புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவுப் போக்குவரத்துக்கள் மட்டக்களப்பு – திருகோணமலை வீதியூடாகவே நடைபெறுற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கிலும் மலைநாட்டிலும் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.
No comments: