இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும், கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டக்கிளைகளைகள் மற்றும், கொழும்புக்கிளை உள்ளிட்ட ஒன்பது மாவட்டக்கிளைப் பிரதிநிதிகள், மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் இந்த தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில் வாக்கெடுப்பு இடம்பெறும் குறித்த நகரசபை மண்டபத்தின் வெளிப்புறமாக ஒவ்வொரு மாவட்டக்கிளை உறுப்பினர்களினதும், மத்தியகுழு உறுப்பினர்களதும் உறுப்புரிமை பரிசோதிசோதிக்கப்பட்டு, உறுப்புரிமை உறுதிப்படுத்தபின்னர் அவர்களுக்கான கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வாக்கெடுப்பு மண்டபத்திற்குள் கட்சி உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது.
அத்தோடு மண்டபத்தினுள் வாக்கெடுப்புச் செயற்பாடுகளுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்றவேளை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராசா, போட்டி வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சறீதரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரை அழைத்து நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பின்னர் வாக்கெடுப்புச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் மகளிர் அணியைச்சேர்ந்த இருவரின் பெயர்கள் மாவட்டக்கிளைப் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதி தமக்கு கிடைக்கவேண்டுமெனவும் குறித்த பெண்கள் மண்டபத்தின் வெளியே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் திருகோணமலை நகரசபை மண்டப வளாகத்தில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.
No comments: