மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 2,482 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் பிரதான வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த 6 பிரதான திட்டங்களின் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இவ்வருடம் பெரிய கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 292 மில்லியன் ரூபாவாகும். இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் மற்றும் உள்ளூர் நிதியுடன் கொழும்பில் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட பணத்தில் நொரிஸ் கால்வாய் உப திட்டத்தின் மீதமுள்ள பணிகளும், ஒருங்கிணைந்த மழைநீர் முகாமைத்துவ அமைப்பின் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் அம்பத்தளை நீரேற்று நிலையம், மாதிவெல கிழக்கு வளைவு, டொரிங்டன் சுரங்கப்பாதை அபிவிருத்தி உள்ளிட்ட 54 உப திட்டங்கள் கடந்த வருடம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருட வரவு செலவு திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி திட்டத்திற்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கொழும்பை சுற்றி தற்போதுள்ள கால்வாய்கள், ஏரிகள் மற்றும் நடைபாதைகளை பராமரித்தல் மற்றும் புனரமைத்தல், ஈர நிலங்கள் மற்றும் தாழ் நிலங்களை அபிவிருத்தி செய்தல் இதன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. களு ஓயா மழைநீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டமும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
வெரஸ் கங்கை வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு திட்டத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுகேகொட ரத்தனபிட்டிய கால்வாய், தெல்கந்த கால்வாய், பொரலஸ்கமுவ வடக்கு, பொரலஸ்கமுவ தெற்கு மற்றும் வெரஸ் ஆறு ஆகிய 5 வலயங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் 55.5 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டுகிறார். மழைநீர் தேங்கும் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம் சுற்றுச் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர கொலன்னாவ மழை நீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபாவும் ஒலியமுல்ல மழை நீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு திட்டத்திற்கு 450 மில்லியன் ரூபாவும் இவ்வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ திட்டமானது கித்தம்பஹுவ கால்வாய், சலலிஹினி மாவத்தை கால்வாய் மற்றும் களனி கங்கை இணைக்கும் தாதுதொட்ட கால்வாய் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதியை உள்ளடக்கியது. ஒலியமுல்லை திட்டமானது களனி மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாகக் கூறிய அமைச்சர், அப்பிரதேசங்களில் வெள்ளத் தணிப்பு மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அத்துடன் பேர ஏரித் திட்டத்திற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 40 மில்லியன் ரூபாவாகும். கொழும்பு நகரில் அமைந்துள்ள பேர ஏரி மாநகர மற்றும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பாழடைந்துள்ளது. எனவே மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பேரா ஏரியின் நீரின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றாடலை அழகுபடுத்துதல் மற்றும் மக்களின் சுகாதார மேம்பாடு என்பன மேற்கொள்ளப்படும் என பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.
No comments: