(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது பரவலாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் தாழ் நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சிதருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 123 குடும்பங்களைச் சேர்ந்த 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 109 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேர் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க படுவாங்கரைப் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக அமைந்துள்ள வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியின் இரு இடங்களை ஊடறுத்து வெள்ள நீர் மிக வேகமாக பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான தரை வழிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக அவ்வீதியைக் கடப்பதற்கு போரதீவுப் பற்றுப் பிரதேச சபையினால் உழவு இழந்திரங்களுடாக பணிகளை ஏற்றி இறக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
மாவட்டதிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிவதுடன் பெரிய குளங்களின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிக மழை பெய்வதனை அவதானிக்க முடிகின்றது. மழை காரணமாக நவகிரி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக அதன் இரண்டு வான் கதவுகளும் 6 அடி நீர் மட்டம் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக பிரிவின் வேத்துச்சேனை கிராம மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் கிரான் பிரதேச செயலக பிரிவின் புலிபாய்ந்தகல் பாதையில் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதனால் அந்த பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் போக்குவரத்துக்காக உழவு இயந்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தின் ஏனைய இடங்களில் இதுவரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. மாவட்டத்தில் ஆற்றினை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் மழை வெள்ளம் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
No comments: