
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருமணத்திற்குப் பின்னரான குடும்ப வாழ்வில் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க சமூக பொறுப்புக் கூறும் விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் இணைப்பாளரும், மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.
இது விடயமான கலந்துரையாடல் அட்டாளைச்சேனை யாடோ மண்டபத்தில் திங்களன்று 27.11.2023 இடம்பெற்றது.
கூட்டத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் செயற்பாட்டாளர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவித்த நிஹால் அஹமட்,
திருமணத்திற்குப் பின்னரான குடும்ப வாழ்வில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குப் உட்படுகின்றனர். மனித எழுச்சி அமைப்பின் பயனாளிகளில் ஒரு பங்கினர் குடும்ப வன்முறைகளில் பாதிப்புற்று நலிவுற்ற பெண்களாகவும் குழந்தைகளாகவும் இருக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் விவாகரத்து, தாபரிப்பு தொடர்பில் தமக்கு நீதி வேண்டி காதி நீதிமன்றங்களையும் நாடுகின்றனர்.
இவ்வாறான பெண்களும் அவர்களது குழந்தைகளினதும் வாழ்வாதாரம், மனோ நிலை, எதிர்காலம் உள்ளிட்ட பல வாழ்வியல் அம்சங்கள் மேலும் மேலும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்திலெடுத்து பாதிக்கப்பட்டுப் போயுள்ள பெண்களதும் அவர்களது பிள்ளைகளினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு நீதிக்காகவும், நிவாரணமளிக்கவும் மனித எழுச்சி நிறுவனம் நீண்ட நாட்களாக பங்களித்து வருகின்றது.
"அதனடிப்படையில் பொருத்தமான செயற்பாட்டாளர்களையும் சேவை வழங்குனர்களையும் கண்டறிந்து இணைப்பாக்கம் செய்து சமூகப் பொறுப்புணர்வையும் விழிப்புணர்வையும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த சேவைகளில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ளவர்களின் மனநிலை ஆற்றுப்படுத்தல், காதி நீதிவான் மற்றும் காதி நீதிமன்ற நிருவாக நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு அம்பாறை மாவட்டத்தில் காதி நீதிமன்றங்களில் வழக்குகள் ஆவணப்படுத்தலுக்குத் தேவையான 8000 கோவைகளை வழங்கி வைக்கவுள்ளோம். இது காதி நீதிச் சேவையை வினைத்திறனுள்ளதாகவும் இலகுவானதாகவும் ஆக்க உதவும்.
மேலும், பிளவுபட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள சிறார்களின் கல்வி மற்றும் பாதுகாப்புக்கு ஆதரவும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பையும் வலுவூட்டலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான செயற்பாட்டுக் கலந்துரையாடலுக்கு பிரதேச செயலாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்கள், சமூக நல செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் பரோபகாரிகள், ஊர்ப்பிரமுகர்கள் மார்க்க அறிஞர்கள் ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள், அவர்களின் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பங்களிப்புச் செய்ய சேவை வழங்குனர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினைத் திட்டமிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவு, ஒத்துழைப்பினை மாவட்ட செயலகம் வழங்கி வருகின்றது" என்றார்.
No comments: