News Just In

11/10/2023 08:46:00 PM

40 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்றுக் கிடந்த ஏறாவூர் மீராகேணி பிரதான பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் ஆரம்பித்து வைப்பு





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று புனரமைப்புச் செய்யப்படாதிருந்த ஏறாவூர் மீராகேணி வீதியிலுள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ரூபாய் இரண்டரைக் கோடி செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல்துறை முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

மீராகேணி, சத்தாம்ஹ{ஸைன், தளவாய் சவுக்கடி ஆகிய பிரதேச பொது மக்களுக்கு நவீன பாலம் அமைப்பு ஓரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

ஏறாவூர் நகரை இணைக்கும் மீராகேணி வீதியும் அதனோடு உள்ள இந்தப் பாலமும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக புனரமைப்புச் செய்யபடாது கவனிப்பாரற்றுக் கிடந்ததால் தினமும் இந்த வீதியைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

சுற்றாடல்துறை முன்னாள் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்ததன் பேரில் வீதி அபிவிருத்தி பெருந்தெருக்கள் அமைச்சின் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மீராகேணி வீதி பிரதான பாலத்தின் நிருமாண வேலைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை 10.11.2023 இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பொறியியலாளர் எம். சர்ஜுன், முன்னாள் சுற்றாடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ. அப்துல் நாஸர், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான எம்.ஐ.எம். தஸ்லீம், எம்.சி கபூர், தொழினுட்ப உத்தியோகத்தர் எம். பைஸல் ஆகியோரும் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments: