
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடமாடும் சேவையானது நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
நடமாடும் சேவையானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கமைவாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் பந்துல குணவர்த்தனவின் பணிப்புரையின் கீழ் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் போன்றன இணைந்து நடாத்தியிருந்தது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு அமைவாக வெளிக்கள அரச உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான நிபந்தனைகளை நீக்குதல், வாகன பதிவுச் சான்றிதழ் நிபந்தனைகளை நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளல், அனைத்து வாகனங்களுக்குமான உரிமை மாற்றங்களை செய்தல், வாகனங்களை பரீட்சித்து நிறைச்சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ்களை வழங்குதல், மோட்டார் வாகனத்தில் காணப்படுகின்ற தெளிவற்ற அடிச்சட்டகை மற்றும் எஞ்சின் இலக்கங்களை அச்சிடுதல் போன்ற சேவைகளும் அதனுடன் இணைந்ததாக சாரதிஅனுமதிப் பத்திரம் வழங்குதல்,
சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல், சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகன சான்றிதழ்களின் சாராம்சங்களை வழங்குதல்,
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முகமாக விசேட மருத்துவக் குழுவின் பரிந்துரைகளை வழங்குதல், எழுத வாசிக்க முடியாதவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக சிறப்பு பரீட்சைகளை நடாத்துதல், புதிய வாகன பதிவுக்கான 50 CCக்கும் குறைவான கொள்ளளவை கொண்ட மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் போன்ற சகல சேவைகளும் நேற்று மாலை 5 மணி வரை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வழங்கப்பட்டன.
நீண்டகாலமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் ஏதேனும் ஒரு சேவைக்கு விண்ணப்பித்து இதுவரை தீர்வு கிடைக்காத விடயங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொண்டதோடு, வருமான வரி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரை கடிதங்களையும் வாகன உரிமையாளர்கள் இதன்போது பெற்றுக்கொண்டிருந்தனர்
No comments: