News Just In

10/02/2023 06:26:00 PM

நீதிபதி சரவணராஜா வெளியேறியிருக்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும்!


நீதிபதி சரவணராஜா வெளியேறியிருக்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும் : 


முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்தது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர் மீள்வது கடினம். இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அவரது உடல் வீதியில் கிடந்திருக்கும். எனவே அவர் முந்திக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என்றே நான் கூறுவேன் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா புகலிடம் கோரி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்பது முற்றிலும் பொய்யானது.

புகலிடம் கோருவதற்கு அவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி அல்ல. அவர் மாவட்ட நீதிபதி. மதிப்பிற்குரிய ஒருவர். இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர். அடுத்த வருடம் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைக்க பட்டியலில் அவரது பெயர் இருக்கின்றது. சம்பளம் மிக அதிகரிக்கும்.

இலங்கையில் கௌரவம் மிக்க பதவி அவருடையது. அவர் நினைத்தால் அரசியல்வாதியையும் கூட சட்டத்தின் முன்பு அடிபணிய வைக்க முடியும்.

அவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டோ, நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறையிட்டோ, சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டாலோ இதற்கு பரிகாரம் கிடைக்காது. ஏனென்றால் நீதிபதியை பின்தொடர்வது ஆயுத தரப்பினர்.

நிம்மதியாக அவரால் தூங்க முடிந்திருக்காது. எனது பார்வையில் நான் கூறுகின்றேன். நிம்மதியாக அவர் தூங்க முடியாது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக, இந்த குருந்தூர் மலை தீர்ப்பிற்கு பின்னர் அவர் நிம்மதியை இழந்திருப்பார்.

அவர் நிச்சயமாக மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார். அதனால் தான் அவர் நாட்டை விட்டுச் சென்றிருக்கின்றார் என நான் பாரக்கின்றேன்.

வெளிப்படையாக இவற்றை சொல்ல முடியாவிட்டாலும், மிகப்பெரிய அச்சுறுத்தல் அவருக்கு இருந்தது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர் மீள்வது கடினம்.

இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அவரது உடல் வீதியில் கிடந்திருக்கும். எனவே அவர் முந்திக் கொண்டுள்ளார் என்றே நான் பார்க்கின்றேன்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து ஒரு நீதிபதி வெளியேறிச் சென்றிருக்கின்றார்.

ஆனால் எதிர்காலத்தில் இந்த விடயம் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய அலையை ஏற்படுத்தப் போகின்றது. சர்வதேசத்தில் இருந்து மிகப் பெரிய அதிர்வலைகளை இலங்கைக்கு எதிராக தோற்றுவிக்க வாய்ப்பிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments: