பிராந்தியத்தில் சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கருத்தறியும் செயலமர்வு ஞாயிறன்று 03.09.2023 மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் விடுதியில் இடம்பெற்ற இந்த செயலமர்வை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வாளரும் சமூக ஊடகப் பிரிவு இணைப்பாளருமான சம்பத் சமரகோன் நடத்தினார்.
இந்த செயலமர்வில், பிராந்தியத்தில் குறிப்பாக, கிழக்கு மாகாணம் தழுவியதாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களின் போக்கு தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், அவற்றைச் சீர்செய்வதற்கான பரிந்துரைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், ஏற்கெனவே சமூக வலைத்தளங்களைப் பொறுப்புமிக்க வகையில் பயன்படுத்துவதற்கான ஒழுக்க நெறிக்கோவை பிரகடனம் தொடர்பிலும் அதில் சேர்க்கப்படவேண்டிய அல்லது நீக்கப்பட வேண்டிய ஒழுக்க நெறிகள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களிடமிருந்து கருத்தறியப்பட்டது
சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய விதத்தில் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்காத வண்ணம் சமூக வலைத்தளங்களின் பாவனையை ஊக்குவித்தல் டிஜிட்டல் தகவல்துறை தொடர்பான அறிவினை பயன்படுத்துதல், டிஜிட்டல் ஊடக உரிமைகள் சமூக அரசியல், பொருளாதார கலாசார ரீதியிலான மனித உரிமைகளுடன் இயற்கையாகவே இணைந்திருப்பதுடன் வேறுபடுத்த முடியாத அளவுக்கு உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு அங்கீகரித்தல் எனும் குறிக்கோளுடன் பல்வேறுபட்ட விடயங்கள் இந்த செயலமர்வில் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல். தேவ அதிரன், காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் ஆகியோரும் சிரேஷ்ட மற்றும் இளம் சமூகவலைத்தள ஊடகவியலாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: