




முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றியவாறு இரண்டு சிறிய ரக லொறிகளில் சுமார் பதினைந்து பேர் அளவில் வருகை தந்தனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இவர்கள் வருகை தந்த போது ஒரு லொறியின் சில்லு காற்றுப் போன நிலையில் அவர்கள் இரு வாகனங்களையும் நிறுத்தி விட்டு ரயர் மாற்றியுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் ரயர் மாற்றிக்கொண்டு இருந்த வேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த கே.டி.எச் ரக வாகனம் ஒன்று அதிகாலை மூன்று மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதியது.
தொடர்ந்து அந்த வாகனம் மறறைய வாகனத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் கே.டி.எச் ரக வாகனத்தில் வந்த சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரும் வெல்லம் பிட்டி பகுதியில் இருந்து வந்த வாகனத்தின் ரயர் மாற்றிக்கொண்டிருந்தவர்களில் இருவரும் என மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் மாங்குளம் ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களில் மூவர் மாங்குளம் ஆதார மருத்துவமனையிலும் ஐவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments: