நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்கள் தற்போது குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 48,000 குடும்பங்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைக்கப்பட்ட பௌசர்களைப் பயன்படுத்தி, 12 மாவட்டங்களுக்குள் உள்ள 40 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சுமார் 156,000 நபர்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர் தட்டுப்பாட்டால் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சுதந்த ரணசிங்க, வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் பௌசர்கள் மூலம் நீரை வழங்குவதற்கு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் குடிநீரை வழங்குவதற்காக அரசாங்கம் சுமார் 2 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: