News Just In

3/29/2023 07:45:00 PM

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை முறை!

இலங்கையில் கனியவள கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, பொதுஜன முற்போக்கு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போராட்டம் குறித்து தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில், எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

கனியவளக் கூட்டுத்தாபனத்தை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் முதல் அந்தக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், தொழிற்சங்கங்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தன.

கனிய வளக்கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சீன, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்த நிலையில் நேற்றுப் பிற்பகல் முதல் அனைத்து விநியோகப் பணிகளில் இருந்தும் விலக தொழிற்சங்கப்பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்தனர்.

எவ்வாறிருப்பினும், நாட்டில் எரிபொருள் விநியோகத்தை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பவும், களஞ்சிய முனையங்களுக்குள் நுழைவதைத் தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.

புத்தளம் பிரதேச எரிபொருள் நிலயங்களில் புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரமே பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.



எரிபொருளைப் பெற்றுக் கொள்ள இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளில் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது

No comments: