News Just In

2/10/2023 07:50:00 AM

இலங்கையில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் குறித்து வெளியான தகவல்!

 
வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமது சங்கம் தொடர்ச்சியாக அதிகாரிகளுக்கு அறிவித்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை எனவும், கடத்தலில் கிடைக்கும் பணத்தொகையை கருத்தில் கொண்டு கலப்படம் கலந்த தேங்காய் எண்ணெயை நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதிப்பதாகவும் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தியா மற்றும் அயல் நாடுகளில் இருந்து இலங்கைக்கு மிகக் குறைந்த விலையில் கொண்டு வரப்படும் இந்த தேங்காய் எண்ணெய், அந்நாடுகளில் பயன்படுத்திய பின்னர் அகற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மேலும், இவ்வாறான கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதனை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளில் பயன்படுத்திய பின்னர் அகற்றப்படும் கழிவுகளுடன் தேங்காய் எண்ணெயை வரிச்சலுகையின் கீழ் இந்நாட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

இதனை சரிபார்க்க இலங்கையில் எந்த நிறுவனமும் இல்லை. உண்மைகளைச் சுட்டிக்காட்டினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்று அரசாங்கக் கிடங்கில் இருந்து இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அசுத்தமான தேங்காய் எண்ணெய் மாதிரிகளை கண்டுபிடித்துள்ளோம். இவை மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்று நாங்கள் உறுதியாகக் கூறுகின்றோம்.

இவ்வாறு பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: