News Just In

2/09/2023 10:32:00 AM

தமிழரசுக் கட்சியிலிருந்து நான் விலகியதாக பரப்பப்படும் செய்தி போலியானது - கி.சேயோன்




இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள எவருடனும், எந்த முரண்பாடும் தமக்கு இல்லை எனவும், தான் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவே செயற்பட்டு வருவதாகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வாலிபர் முன்னணியின் தலைவருமாக கி.சேயோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து கி.சேயோன் விலகியதாக அண்மையில் சில ஊடகங்களில் வெளியாகி செய்திகள் தொடர்பில் தெளிவுறுத்தும் வகையில் இன்று (08) மட்டு ஊடக மையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நான் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் உள்ள சிலருடன் முரண்பட்டு கொண்டு கட்சியிலிருந்து விலகிவிட்டதாக நேற்று முதல் சில ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இச் செய்தி முற்றுமுழுதாக பொய்யான செய்தியாகும்.

உண்மையில் எனது கட்சி பாரம்பரியமான கட்சி, பலரின் தியாகங்களில் உருவான கட்சி. அத்தகைய கட்சியில் அடிமட்டத் தொண்டனாக இருந்து பல சவால்களையும் ,போராட்டங்களையும் எதிர்கொண்டு தற்போது வாலிபர் முன்னணியின் தலைவர், மத்திய குழுவின் உறுப்பினர் என்றெல்லாம் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்து வருகின்றேன்.

அந்தவகையில், கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் கட்சித் தலைமைக்கு ஓர் கடிதமொன்றினை கடந்த மாதம் அனுப்பியிருந்தேன். அக் கடிதத்தில் மேற்குறித்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் நான் பொறுப்பு நிலை பதவிகளிலிருந்து விலக நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அவ்விடயமே தற்போதைய தேர்தல் காலத்தில் திரிவுபடுத்தப்பட்டு கட்சியினதும், கட்சியின் உறுப்பினர்களின் நற்பெயரையும் கள ங்கப்படுத்தும் விதமாக போலியான செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளதாக நம்புகின்றேன்.

அதேபோல் எமது நாடாளுமன்ற உறுப்பினரும் எனது நண்பருமாகிய இரா. சாணக்கியனுக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக போலியான செய்திகளை சிலர் வெளியிட்டு அரசியல் இன்பம் கண்டு கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு எந்தவொரு முறண்பாடுகளும் எமக்குள் இல்லை. அவர் தன்னுடைய மக்கள் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். மறுபுறம் நான் எனது பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

எதுவாயினும் தேசியத்தோடும், தமிழர்களின் உரிமை சார்ந்தும் பயணிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினை மேலும் வலுப்படுத்தும் வகையில் எனது அரசியல் பயணம் தொடரும், நாம் தொடர்ந்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தோடு பயணித்துக் கொண்டிக்கின்றவர்கள். அதன்படி இம்முறை தேர்தலிலும் வீட்டு சின்னம் மக்களின் அமோக ஆதரவுடன் அதிகப்படியான சபைகளைக் கைப்பற்றும், அதற்குரிய பணிகளையும் நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். எனத் தெரிவித்தார்.


No comments: