ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக இந்தியாவில் இருந்து சிறப்பு பிரதிநிதி ஒருவர் இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது. நத்தார் விடுமுறையை கழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியாவுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி சகல பணிகளை முடித்து விட்டு கடந்த வியாழக்கிழமை நுவரெலியா புறப்பட்டுச் சென்றார். நுவரெலியாவில் சில தினங்கள் தங்கியிருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே சில முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவும் ஜனாதிபதி ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் இந்தியாவை சேர்ந்த சிறப்பு பிரதிநிதிகள் சிலர் மிகவும் இரகசியமான முறையில் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக பேசப்பட்டது. இது சம்பந்தமாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்றும் நடந்துள்ளது.

அத்துடன் இந்திய புலனாய்வுப் பிரிவான றோவின் பிரதானியும் இலங்கைக்கு வந்து சென்றதாக தெரியவருகிறது. இந்த நிலையில், ஜனாதிபதியை சந்திக்க இந்தியாவில் இருந்து முக்கிய பிரதிநிதி ஒருவர் அடுத்த சில தினங்களில் இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ராம் மாதவ் இவ்வாறு இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் ராம் மாதவ், கொழும்பில் இருந்து உலங்குவானூர்தி மூலம் நுவரெலியா செல்ல திட்டமிட்டுள்ளார்.
No comments: