News Just In

9/26/2022 01:25:00 PM

கிராமிய கைத்தொழில் சந்தையும், கண்காட்சியும் திறந்து வைப்பு!





பைஷல் இஸ்மாயில் -
நவீன உற்பத்திகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு செயற்கைச் சூழலுக்குள் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய உற்பத்திகள் மங்கி மறைந்து வருகின்றன என்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிராமிய சிறு கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் குச்சவெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமியக் கைத்தொழில் பொருட்களின் சந்தையும், கண்காட்சியும் இன்று (26) குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியாளர்களின் சந்தையுடனான கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்ததன் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவீன அவசர உற்பத்திகளின் ஆக்கிரமிப்பின் விளைவாக உள்ளுர் கிராம உற்பத்திகளுக்கு தேசிய சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. தற்போதைய நவீன அவசர உலகில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் இயற்கைக்குச் சவால் விடும்படியாகவும், சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிப்பதாகவும் அமைந்திருக்கின்ற போதும் நம்மில் அநேகம் பேர் அவசர உலகப் போக்கில் அதனையே விரும்புகின்றோம்.

நீண்டகாலப் போக்கில் இந்த நவீன உற்பத்திகளால், இயற்கைக்கும் தேக ஆரோக்கியத்திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை உணர்ந்த ஒரு சாரார் பாராம்பரியக் கைத்தொழில்களை ஊக்குவிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று சிறு கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களின் உணவு உற்பத்திகளை ஊக்குவிக்க அரசும் இன்னும் சில அரச சார்பற்ற சமூக அமைப்புக்களும் உதவிக் கொண்டிருக்கின்றன. இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நவீன மாயையிலிருந்து விடுபட்டு எமது பரம்பரியத்திற்குள் மீண்டும் நாம் உள்நுழைவதன் மூலம் நாமும் எமது எதிர்கால சந்ததியும் நீடித்து நிலைக்கக் கூடியதான இயற்கைக்கும், கேடு விளைவிக்காத சிறந்த சூழலுக்கும் மாறிவிட பெரும் வாய்ப்பாகும்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களான பெண்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகக் கூட இதனைப் பார்க்கும்போது இதற்கென ஒரு தேசிய சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன். அதன் மூலமாக கை வினைத்திறனில் ஈடுபட்டுள்ள இந்தக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்திலே ஒரு சிறந்த நிலைக்குச் செல்ல முடியும். இதனூடாக தமது உற்பத்திகளை அவர்கள் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் சென்று பிரபல்யப்படுத்த வாய்ப்பும் ஏற்படும் என்றார்.

இக்கண்காட்சியில் பாரம்பரிய உணவு வகைகள், நஞ்சற்ற மரக்கறி மற்றும் தானியங்கள், சிற்றுண்டி மற்றும் முறுக்கு வகைகள், உணவு வகைகள், ஆடைகள், பைகள், மட்பாண்டங்கள், பனையோலை உற்பத்திப் பொருட்கள், பன்பாய்கள், வீட்டு அலங்காரங்கள், தாவர உற்பத்திகள் மற்றும் இன்னோரன்ன பாரம்பரிய உற்பத்திகள் இடம்பிடித்திருந்தன. இந்த சந்தையும், கண்காட்சியும் காலை 9.30 தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார், உதவி பிரதேச செயலாளர் திருமதி பாமா மோகன முரளி உள்ளிட்ட தன்னார்வத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளும் இன்னும் கிராமியக் கைத்தொழில் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments: