News Just In

5/12/2020 11:07:00 AM

முன்பள்ளிச் சிறார்களுக்கு வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல் அனுபவங்களைப் பெற்றுக்கொடுப்போம்!

கொவிட் 19 தொற்று காரணமாக பிள்ளைகள் எல்லோரும் வீட்டினுள் முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய இக்கட்டான காலச்சூழலில் முன்பிள்ளைப் பருவத்தினர் மீதும் அதிக கவனம் செலுத்தவேண்டிய அவசியமும் உள்ளது. முன்பிள்ளைப்பருவம் என்பது பிள்ளையொன்று கருவிலே உருவான காலம் தொடக்கம் 5 வயது வரையான காலப்பகுதியாக இலங்கையில் வரையறுக்கப்பட்டுள்ளது. 

பருவங்களிலே அதி முக்கியத்துவம் வாய்ந்த பருவமாக முன்பிள்ளைப்பருவம் கல்வியலாளர்களால் பார்க்கப்படுகின்றது. ஏனெனில் ஒரு பிள்ளையின் மூளை வளர்ச்சியில் 85% வீதமான வளர்ச்சி மிகத் துரிதமாக இக்காலப்பகுதியிலேயே ஏற்படுகின்றது. இதில் 3 வயது தொடக்கம் 5 வயது வரையான பிள்ளைகள் கற்றல் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்காக முன்பள்ளிக்குச் செல்லுகின்றனர்.

ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பருவமாகவும் இம்முன்பிள்ளைப் பருவம் காணப்படுவதனால் அவர்களது விருத்திக்கான செயற்பாடுகளை முன்பள்ளிகள் முன்னெடுத்திருந்தன. ஆனால் தற்போதைய கொவிட் 19 பரவல் காரணமாக துரதிஷ்டவசமாக அவர்களும் முன்பள்ளிக்குச் செல்லமுடியாது வீடுகளினுள் முடக்கப்பட்டுள்ளனர். 

எனினும் இம்முன்பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய திறன்கள், ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பங்களை வீட்டில் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இல்லையேல் அவர்களது விருத்தி தடைப்படுவதுடன் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையும் உருவாகலாம். 
பாடசாலை விடுமுறை, ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலும் முன்பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோர், சகோதரர்கள், ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் என அனைவரும் வீடுகளிலே ஒன்றாக இணைந்திருக்கின்ற சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இவ்வாறான வீட்டுச் சூழல் முன்பள்ளிப் பிள்ளையைப் பொறுத்தவரையில் சாதகமானதே. 

வீட்டில் இடம்பெறும் நாளாந்த செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்துவதனூடாக முன்பிள்ளைப் பருவ வளர்ச்சி, விருத்தியை ஏற்படுத்த முடியும். இவ்வாறான நிலையில் பெற்றோர்கள் தமது வீட்டுச் சூழலில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதனூடாக கற்றல் அனுபவங்களை தமது பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும் எனப் பார்ப்போம்.

பிள்ளைகள் பார்த்தல், கேட்டல், அவதானித்தல், அனுபவித்தல் என்பவற்றினுடாக சூழலைப் புரிந்து கொள்வதுடன் பல்வேறு விடயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். பிள்ளைகளுக்கு தான் வாழும் வீடு முக்கியமானதாகும். வீட்டைப் பொறுத்தவரையில் பிள்ளைகளிடமுள்ள திறன்கள், ஆற்றல்களை வெளிக்கொணரும் முக்கிய இடங்களில் ஒன்று சமையலறை என்பதனை எத்தனை பெற்றோர் அறிந்திருப்பார்கள். பெரும்பாலும் தாய்மார் பல்வேறு காரணங்களுக்காக சமையலறையினுள் தமது பிள்ளைகளை அனுமதிப்பதில்லை.

பொருட்களைக் கையாளுவதற்கும் எதிர்காலத்தில் எழுதுவதற்கும் பிள்ளைகளது விரல்கள், கைகளுக்கு பயிற்சிகள் (நுண்ணியக்கத் திறன் விருத்தி) அவசியம். அப்பயிற்சிகளுக்கான செயற்பாடுகள் சமையலறையில் உண்டு. 

உதாரணமாக உணவுக்காக ரொட்டி தயாரிக்கும் செயற்பாட்டை எடுத்துக்கொண்டால் தாய்மார் நீங்கள் ஒரு பாத்திரத்தில் கோதுமை மா இட்டு நீருற்றி அதனை பிசைந்துகொள்ளும் அதேவேளை பிள்ளைக்கும் ஒரு சிறிய பாத்திரத்தைக் கொடுத்து அதற்கேற்ப சிறிது மாவும் நீரும் இட்டு பிசைவதற்கு அவர்களையும் வழிப்படுத்துங்கள். இவ்வாறான செயற்பாடுகளை பிள்ளைகள் விருப்புடன் மேற்கொள்வார்கள். இதனால் பிள்ளையின் விரல்களுக்கு பயிற்சி கிடைக்கும்.
பின்னர் பிசைந்த மாவை தட்டொன்றில் வட்டமாக தட்டி வைக்க வழிப்படுத்துங்கள். இப்போது வட்டம் என்ற வடிவத்தை அறிந்துகொள்வார். அத்துடன் கோதுமை மாவின் நிறம் வெள்ளை என்பதையும் அறிந்துகொள்வார். ஒரு ரொட்டி அல்லது இரண்டு ரொட்டி செய்ய வழிப்படுத்தும்போது ஒன்று, இரண்டு என்ற எண்ணிக்கையையும் அறிந்து கொள்வார்.

பின்னர் ரொட்டியை கல்லில் வேகவிட்டு அவர் கையிலேயே கொடுத்து விடுங்கள். தான் தயாரித்த ரொட்டி என்பதால் பிள்ளை மிகவும் சந்தோசமடைவார். அந்த சந்தோசத்தை ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடனும் நிச்சயம் பகிர்ந்து கொள்வார். அதைப் பார்த்து நீங்களும் சந்தோசமடைவீர்கள். மகிழ்ச்சிகரமான கற்றல் என்பது இதுவாகும்.

சமையலறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாட்டினூடாக வடிவம், நிறம், எண்ணிக்கை என்ற கணித எண்ணக்கருக்கள் சிலவற்றை பிள்ளை அறிந்து கொண்டதுடன் கோதுமை மா, வெள்ளை, பிசைதல் போன்ற சொற்களையும் கற்றுக்கொள்வார். 

ரொட்டி செய்யத் தேவையான பொருட்கள் பற்றித் தெரிந்து கொள்வதுடன் ரொட்டி செய்யும் முறையையும் அனுபவத்தினுடாகக் கற்றுக்கொள்வார். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் முன்னரும் பின்னரும் முறையாக கைகளைக் கழுவிக்கொள்ளும் பயிற்சிகளையும் அளிக்கவேண்டும். 

இதனூடாக சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் பிள்ளைகளிடம் விருத்தி செய்து கொள்ளவும் முடியும். இதேபோல் தேங்காய்ப் பூவை நீரிட்டு பிழியும் செயற்பாட்டையும் மேற்கொள்ள வழிப்படுத்தலாம். இதனால் பிள்ளைகளது விரல்களுக்கும் கைகளுக்கும் பயிற்சிகள் கிடைக்கும்.

மற்றுமொரு உதாரணத்தை பார்ப்போமானால் பெற்றோர் சந்தையில் பொருட்களை வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்தால் அவற்றை என்னவென்று பார்ப்பதற்கான ஆர்வம் பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளிடமும் இருக்கும். அவ்வாறு நீங்கள் வாங்கி வந்தவை மரக்கறி வகைகளாயின் பிள்ளைகளிடம் கொடுத்து அவற்றை தெரிந்து வேறு வேறாக வகைப்படுத்தி வைக்க அவர்களை வழிப்படுத்துங்கள். 

இப்போது அவர்கள் கத்தரி, வெண்டி, கரட், பீற்றாட், கொச்சிக்காய் என வேறு வேறாகப் பிரித்து வைக்க முயற்சிப்பர். இதனூடாக தெரிதலும் வகைப்படுத்தலும் என்ற கணித எண்ணக்கருவை விளங்கிக்கொள்வார்கள். இச்செயற்பாட்டின்போது புதிய பொருட்களின் பெயர், அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
பிள்ளைகள் கேள்விகளை வினவும் இயல்பு கொண்டவர்கள். பிள்ளைகள் கேள்வி கேட்கும்போதெல்லாம் அவர்களுக்குப் பதிலளிக்கத் தவறாதீர்கள். ஏனெனில் பிள்ளைகள் கேள்விகளைக் கேட்பதனூடாகவே பலவற்றைக் கற்றுக் கொள்கின்றார்கள். 

முன்பிள்ளைப் பருவத்தினரைப் பொறுத்தவரையில் அவர்களை இருத்தி வைத்து இது வட்டம், இது பச்சை நிறம், ஒன்று இரண்டு என எண்களையும் சொல்லிக் கொடுப்பதை விட இவ்வாறான அனுபவக் கற்றலுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே சிறந்தது. மேற்கூறப்பட்ட எளிய செயற்பாடுகளினூடாக பிள்ளைகளால் பல்வேறு விடயங்களைக் இலகுவாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.
முன்பள்ளிப் பிள்ளைகளின் மொழித் திறன் விருத்தியில் பெற்றோரினது பங்களிப்பு மிக முக்கியமானது. மொழி விருத்தியானது தாயின் கர்ப்பத்திலிருந்தே தொடங்குகிறது. பிள்ளைகள் கூடுதலான நேரத்தை பெற்றோர்களோடு கழிப்பதுடன் அவர்களையே முன்மாதிரியாகவும் பின்பற்றுகின்றார்கள். 

இதனால் பெற்றோர்கள் பேசும் மொழி சரியான உச்சரிப்புடன் இருப்பது அவசியம். உதாரணமாக பெரும்பாலான பிள்ளைகள் சோறு என்பதனை சோச்சா, சோச்சி என்றே உச்சரிப்பார்கள். ஏனெனில் 'று' எனும் எழுத்தை அப்பிள்ளையால் சரியாக உச்சரிக்க முடியாமையே ஆகும். 

சில பெற்றோர் விடும் தவறு என்னவெனில் பிள்ளையைப் போலவே தாங்களும் மழலை மொழியில் பேசுவதுதான். இதனால் பிள்ளை சோச்சா, சோச்சி என்பதுதான் சரி என நினைத்துக் கொண்டு தொடர்ந்து அவ்வாறே பேசவும் முயற்சிப்பார். இது பிள்ளையினது மொழி விருத்திக்குத் தடையாக அமையும்.

எனவே பிள்ளை மழலை மொழியில் எவ்வாறு உச்சரித்தாலும் பெற்றோர் சோறு என முறையாக உச்சரிக்கும்போது அதனை பிள்ளை அவதானித்து சரியாக உச்சரிக்க முயற்சிப்பார். இதேபோல சொக்கா, விக்கா, பாப்பா போன்ற மழலைச் சொற்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

எனவே பெற்றோர்களும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் தாம் உச்சரிக்கும் சொற்களை மட்டுல்ல பேசும் விதத்திலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். கனிவாகவும் மரியாதையாகவும் பேசுவது பிள்ளையின் மொழித் திறன் விருத்திக்கு உதவும். 

மேலும் பிள்ளை ஏனையவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் தமது தேவைகளைக் கூறுவதற்கும், மற்றவர் எதிர்பார்ப்பதை விளங்கிக்கொள்வதற்கும் வளர்ந்தோருடனும் சமவயது நண்பர்களுடனும் தொடர்புகளைக் கட்டியெழுப்பவும் மொழி விருத்தி அவசியம்.

மேலும் கதை கேட்பது என்றால் பிள்ளைகளுக்கு அலாதிப் பிரியம். ஆகவே சிறுவர் கதைகளை செவிமடுக்கவும் செவிமடுத்த கதையை மீளக்கூறவும் பெற்றோர் பிள்ளைகளை வழிப்படுத்தலாம். அதேபோல சிறுவர் பாடல்களைக் கேட்கவும் பாடவும் அவர்களுக்கு சந்தர்ப்பமளிக்கலாம்.
பிள்ளைகளின் வளர்ச்சி, விருத்திக்கு நுண்ணியக்க செயற்பாடுகளும் பேரியக்கச் செயற்பாடுகளும் அவசியம். வீடுகளில் மேற்கொள்ளக்கூடிய நுண்ணியக்க செயற்பாடுகள் சில.

• களி / மா பிசைதல், தேங்காய்ப்பூ பிழிதல்

• பொருட்களைத் தெரிதல், வகைப்படுத்துதல்

• கிறுக்கல் சித்திரம், நிறந்தீட்டுதல் (நிறக்கட்டிகள், விரல்களைப் பயன்படுத்துதல்)

• ஒட்டுதல் (ஒட்டுச் சித்திரம்)

• கட்டுமான தொகுதிகளினால் (Building Blocks) கட்டியெழுப்புதல்

• புதிர்த்தொகுதிகளைப் (Puzzles) பொருத்துதல்

• மணிகளைக் கோர்த்தல்

• குவளைகளை அடுக்குதல்

• போத்தலினுள் நீர் ஊற்றுதல்

• கத்தரிக்கோலால் வெட்டுதல்

• பொத்தான்களைப் பூட்டுதல்

• காலணி அணிதல்

போன்ற செயற்பாடுகளை வழங்குவதனூடாக பிள்ளைகளிடம் நுண்ணியக்கத் திறன்களை விருத்தி செய்யலாம்.
அதேபோல துள்ளுதல், கெந்துதல், ஏறுதல், பாய்தல், ஓடுதல், ஆடுதல், சமநிலையில் நடத்தல், பந்தை எறிதல், பிடித்தல், ஊஞ்சலாடுதல், வழுக்குதல், விளையாடுதல் போன்ற செயற்பாடுகளை வழங்குவதனூடாக பிள்ளைகளிடம் பேரியக்கத் திறன்களை விருத்தி செய்யலாம்.
மேலும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டியதும் அவசியமாகும்.

• உணவு உண்ட பின்னரும் மலசலகூடத்தை பயன்படுத்திய பின்னரும் சுயவிருப்புடன்

சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுதல்

• காலை மற்றும் இரவு வேளைகளில் பற்களை சுயவிருப்புடன் துலக்குதல்
• நினைவுபடுத்தாமல் முகத்தையும் உடலையும் விருப்புடன் கழுவுதல்

• நகங்களை வெட்டுவதற்கு நினைவுபடுத்துதல் / அனுமதித்தல்

• தலைமயிரை வாருதலும் தலைமயிரை வெட்டுவதற்கு அனுமதித்தலும்

• உண்ணுவதற்கு முன் பழங்களையும் மரக்கறிகளையும் கழுவுதல்

• தானியங்கள், பச்சைக் காய்கறிகள், இலைக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை

போன்ற உணவுகள் ஆரோக்கியமானவை என அறிந்திருத்தல்

• பரிச்சயமற்ற புதிய உணவைப் பற்றி விசாரித்தல்

• பெற்றோர், ஆசிரியர் போன்றோரின் விதப்புரைக்கமைய புதிய உணவுகளை உண்ணுதல்

• முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், முறையாக கைகளைக்

கழுவுதல் போன்ற நடைமுறையிலுள்ள சுகாதார வழிமுறைகளையும் சுயவிருப்புடன் கைக்கொள்ளுதல்

போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க பெற்றோர்கள் பிள்ளைகளை வழிப்படுத்துவதனுடாக அவர்களது உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். 

முன்பிள்ளைப் பருவ வளர்ச்சி, விருத்திக்காக வீட்டில் மேற்கொள்ளப்படும் நாளாந்த செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்துவது போதுமானதாகும். அளவிற்கு அதிகமான கற்றல் செயற்பாடுகளை பிள்ளைகளிடம் திணிக்கும்போது அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதுடன் அவர்களது பருவ விருத்தியும் தடைப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

மேலும் ஆன்மீகம், கலாசாரம், விழுமியம் போன்ற விடயங்களையும் நாளாந்த செயற்பாடுகளில் இணைத்துக்கொள்ள மறவாதீர்கள். பிள்ளைகளை ஊக்குவிக்க அவர்களைப் பாராட்டுங்கள். அவர்களுக்கு விருப்பமான உணவுகளை முடிந்தவரை வீட்டில் செய்து கொடுங்கள்.

மேலும் வீட்டுத்தோட்ட செய்கையிலும் பிள்ளைகளை ஈடுபடுத்தலாம். பிள்ளை விரும்பிய பயிர்களை நடுவதற்கு சந்தர்ப்பமளித்து அதனைப் பராமரிமரிப்பதற்கும் அவர்களை ஊக்குவிக்கலாம். இவ்வாறு பொறுப்புக்களை பிள்ளைகளுக்கு வழங்கும்போது அவர்கள் விருப்புடன் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
தொலைக்காட்சி பயன்பாட்டை வினைத்திறனுடயதாக்குவதற்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பதற்கு பிள்ளைகளை வழிப்படுத்துங்கள். அதேபோல் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதனால் நீண்ட காலத்தில் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே பிள்ளைகள் கையடக்கத்தொலைபேசி பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள்.

வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றலுக்கான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மேலதிகமாகத் தேவைப்படின் பயிற்றப்பட்ட அனுபவமுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த அனுபவமுள்ள அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
'பிள்ளைகளை வளர்க்காதீர்கள் 
வளர விடுங்கள்' 

முத்துராஜா புவிராஜா
முதன்மை உளவளத்துணையாளர்

No comments: