News Just In

4/24/2024 03:16:00 PM

நுரைச்சோலை வீட்டுத் திட்டம் உட்பட அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டும். நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப்



 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை மாவட்டத்தில் பல தசாப்தங்களாகத் தீர்வின்றித் தொடரும் காணி அபகரிப்பு மற்றும் இனவாத அடிப்படையில் தடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாது பாழடைந்து கிடக்கும் நுரைச்சோலை வீட்டுத் திட்டம் உட்பட அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிப் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு கிட்டும் என தான் உறுதியாக நம்புவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷர்ரப் தெரிவித்தார்.

காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் தொடர் நடவடிக்கைகள் பற்றிய காணி உரிமைக்கான பொறுப்புக் கூறல் மீளாய்வு சமர்ப்பணத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் அமர்வு அதன் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தலைமையில் ஒலுவில் தனியார் விடுதியில் செவ்வாயன்று 23.04.2024 இடம்பெற்றது.

கலந்துரையாடலில் கிழக்கு மாகாணம் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் காணி மீட்பு நடவடிக்கைகளின் செயற்பாட்டாளர்கள், காணி இழந்தோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், துறைசார்ந்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

நிகழ்வின் வளவாளராக சட்டத்தரணியும் செயற்பாட்டாளருமான எஸ்.எச்.எம். மனாறுதீன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப், நான் ஊடகத்தில் பணியாற்றிய காலம் தொடக்கம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டிருக்கும் இன்றுவரை அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணி ஆக்கிரமிப்பு அபகரிப்பு பிரச்சினைகளின் தீர்வுக்காகத் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன்.

இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டும் காலம் வந்திருக்கின்றது. ஒவ்வொரு பகுதியிலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கும் சாதமான தீர்வுகள் கிடைத்துவிடும். இந்தக்காணிப் பிரச்சினைகள் சம்பந்தமான தரவுகள் அக்குவேர் ஆணிவேராக கிடைக்கச் செய்த பெருமை அம்பாறை மாவட்ட காணி உரிமைகளுக்கான அமைப்பைத்தான் சாரும்.

அந்த அமைப்பின் முயற்சிகள்தான் இனி இந்தக் காணிப் பிரச்சினைகள் தீர்வதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது. வேறு யாரும் அரசியல் தரப்பினர் எடுக்காத தொடர் முயற்சிகளை எத்தனையோ சவால்களைச் சந்தித்த போதிலும் அவர்கள் சோர்ந்து விடாமல் முன்னெடுத்திருந்தார்கள். இந்த மாவட்டத்திலே ஒரு ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டாலும் அதற்கு உரிமை கோரக் கூடிய உரித்துடையவர்கள் இந்த அமைப்பினர்தான்.

இந்தக் காணிகள் அடாத்தாக அபகரிக்கப்பட்டது என்பது கவலைக்கும் வேதனைக்குமுரிய விடயம். கிட்டத்தட்ட திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமாக சுமார் 5000 குடும்பங்களின் 16000 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியும் அர்த்புஷ்டியுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்திருக்கிறது.

போராட்டங்களால் காணி விடுவிக்கப்பட முடியுமா என்று கேட்டால் நான்முடியம் என்றுதான் சொல்லுவேன் அதற்கு தொடர் அழுத்தங்கள் போராட்டங்கள் அலைச்சல்கள் அர்ப்பணிப்புக்கள் தேவை.

இந்த நாடு உணவுப் பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும்போது மக்கள் பயிர் செய்த விவசாயக் காணிகளை வனவிலங்குகளுக்காகவும் வனத்திணைக்களத்துக்காகவும் தொல்பொருளுக்காகவும் புனித பூமிகளாகவும் மாற்ற சட்டம் பயன்படுத்தப்படுகிறதென்றால் இதைவிட அநியாயம் இருக்க முடியாது. ஆனால் இந்த அநியாயங்களுக்கெல்லாம் இனித் தீர்வு கிட்டும் என்பதே கவலைகளுக்கு மத்தியலுள்ள மகிழ்ச்சியான செய்தி” என்றார்.

No comments: