News Just In

8/14/2022 06:45:00 AM

சீன, பாகிஸ்தான் கப்பல்களின் வருகையானது இலங்கைக்குக் கிடைத்த இராஜதந்திரத் தோல்வியாகும் – இரா.துரைரெட்ணம்!!

இந்தியாவினைப் பகைத்துக் கொள்ளும் வகையில், சீனாவின் கப்பல், பாகிஸ்தான் கப்பல் ஆகியன இலங்கையின் துறைமுகங்களை நோக்கி வருகை தருவது இலங்கையின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாகும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தினுடைய தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இன்று நாடு எதிர்நோக்குகின்ற பல விடயங்களைப் பார்க்கின்ற போது இலங்கையின் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள், கடந்த காலத்துக்குரிய செயற்பாடுகள் வெற்றியளித்திருக்கின்றதா? குறிப்பாக குறிப்பிட்ட தினங்களாக சீனவின் போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி விரைவதும், பாகிஸ்தானுடைய கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி விரைவதும் இலங்கையின் இராஜதந்திரத்துக்குக்கிடைத்த தோல்வியாகும். அருகிலுள்ள இந்திய நாட்டைப் கைத்துக் கொண்டு இரண்டு நாட்டுக் கப்பல்களுக்கும் அனுமதி கொடுத்தது என்பது முதலாவது தவறான செயற்பாடாகும். இராஜதந்திர நடவடிக்கையில் அருகிலுள்ள நாட்டைப் பகைத்து ஒரு இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளை முடக்குவதென்பதே இந்த நாட்டுக்குக் கிடைத்த முதலாவது தோல்வியாகும்.

இன்றுள்ள சூழ்நிலையில், இந்த அரசில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அது மாத்திரமல்ல வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கால கட்டத்தில்தான் கௌரவ ரணில் விக்கிரமசிங்க இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை மறந்துவிடக்கூடாது. இதனை அம்பலப்படுத்த வேண்டிய பல விடயங்கள் முடிக்கிவிடப்பட்டிருந்ததன. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு இனிமேலாவது இராஜதந்திர ரீதியாக இந்தியாவை பகைக்காமல், அருகிலுள்ள நாட்டைப் பகைக்காமல் செயற்பட வேண்டும்.

ஒரு நாடு ஒரு நாட்டு அரசைச் செயற்பட வைப்பதற்கு அணிசேரா செயற்பாடுகளும் அணி சேரக்கூடிய செயற்பாடுகளும் தத்துவார்த்த ரீதியாக இருக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் மிக உன்னிப்பாகச் செயற்படுத்திவந்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலமாக எடுப்பார் கைப்பிள்ளைத் தனமான வகையில் தனிப்பட்ட ரீதியில் இராஜதந்திர ரீதியான செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டிருந்தன. இந்த வகையில் கடந்த குறிப்பிட்ட காலமாக நடைபெற்ற செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கக்கூடிய செயற்பாடுகளாக அமைகின்றன. ஆகவெ இந்தியா விவகாரத்தில் இலங்கை அரசு சரியான அணிசேராக் கொள்கையைச் சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இலங்கைக்கான மேலதிக உதவிகளை இந்தியாவிலிருந்து பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் உருவாகும்.

No comments: