News Just In

8/04/2022 10:53:00 AM

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இலங்கை இலட்சியத்தில் ஒளியேற்றியுள்ளது.அமைச்சர் நஸீர் அஹமட்




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடனவுரை எதிர்கால இலங்கையின் இலட்சியத்தில் ஒளியேற்றியுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

புதிய ஜனாதிபதி பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டவர். இத்தெரிவில் ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இதேபோன்றுதான் அவரது உரையும் ஜனநாயகத்தை உயிரூட்டுவதாக இருந்தது. இலங்கையர் என்ற உணர்வில் சிந்தித்து சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி அழைத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை கட்டியெழுப்பவே இதில்அரசியல் அனுகூலங்கள் கைவிடப்பட வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

இருண்ட இலங்கைக்குள் ஒழிந்திருக்காது> ஒரு ஒளிச்சுடரை ஏற்றுவதற்காகத்தான் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமல்ல பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் அவரது உரையில் தீர்வு இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிடின் முழு எம்பிக்கள் மட்டுமல்ல நாடே மூழ்குமென்ற அவரது எச்சரிக்கையை எவரும் அலட்சியம் செய்யக்கூடாது. பல முன்னுதாரங்களை குறிப்பிட்டு அவர் வழங்கிய விளக்கவுரை பொருளாதார வல்லுநர்கள் அரசியல் அனுபவசாலிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எடுத்தெறிந்த போக்கில் எல்லாவற்றையும் எதிர்க்கும் அரசியல் கலாசாரத்தால் வந்த விளைவையே ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சமூகமயப்படுத்தபட்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது மனையியல் பொருளாதாதரத்துக்கு அடித்தளமிடும். இந்த வியூகமே எதிர்கால பொருளாதாரத்தில் விஷேடம் பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் காலடியிலுள்ள பொருளாதார பலத்தை இந்து சமுத்திர தேசத்தின் காலடியில் கொண்டுவரும் அவரது திட்டத்துக்கு பிராந்திய நாடுகளின் பங்களிப்பும் கோரப்பட்டிருக்கிறது.

இதற்காகவே இந்தியா  சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை மீண்டெழ முயற்சிக்கிறது. இறக்குமதியை இறுக்கி ஏற்றுமதியை உயர்த்தும் உன்னத இலட்சியத்துக்காகவே சர்வகட்சி அரசாங்கத்துக்கு முயற்சிக்கப்படுகிறது. எனவே ஜனாதிபதியின் உரையிலுள்ள யதார்த்தங்களை சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியென்ற வகையில் தன்னால் பாராட்டாமல் இருக்க முடியாதென்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.


No comments: