News Just In

3/15/2022 12:15:00 PM

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை!



நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டிலுள்ள தற்போதைய உண்மை நிலைமையை ஜனாதிபதி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இது குறித்து நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமாக டொலர் நெருக்கடியின் காரணமாக நாட்டின் சகல துறைகளும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டமையினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான டொலர் இன்மையின் காரணமாக வங்கிகளிடமிருந்து கடன் கடிதங்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் காணப்பட்டது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஆரம்பித்திருந்த நிலையில் , ரஷ்ய - உக்ரைன் மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்தமையானது அதில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து ஐ.ஓ.சி. நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய எரிபொருள் விலைகளை அதிகரித்தன. எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பஸ் மற்றும் முச்சகரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தன. தொடர்ச்சியாக கோதுமை மா விலை அதிகரிப்பையடுத்து பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டன.

இவை தவிர உணவு பொதி, மருந்துகள், சீமெந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. தற்போது சமையல் எரிவாயுவினை அதிகரிப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு சில தினங்களில் தீர்வு என்று அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற போதிலும் , இவற்றை பெற்றுக் கொள்வதற்காக மக்களும் வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை இன்னமும் மாற்றமடையவில்லை.

இவ்வாறு மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளால் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையினை நிகழ்த்தவுள்ளார்

No comments: