News Just In

1/19/2022 11:20:00 AM

எரிமலை சீற்றம்... மொத்தமாக மூழ்கடித்த சுனாமி: வெளிவரும் டோங்கா தீவின் துயரம்

கடலுக்கடியில் வெடித்துச் சிதறிய எரிமலையால் சுனாமி பேரலை ஏற்பட்டு டோங்கா தீவு மொத்தமாக சிதைந்து போயுள்ள நிலையில், வெளிவரும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரிமலை வெடிப்புக்கு பின்னர் ஏற்பட்ட சுனாமி 50 அடி உயர அலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. இதில் ஏராளமானோர் காயங்களுடன் தப்பியதாகவும், இதுவரையான தகவலின் அடிப்படையில் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சைப்பசேல் என காணப்படும் டோங்கா தீவு தற்போது எரிமலை சாம்பலால் மூடப்பட்டு கருமை நிறத்தில் காட்சியளிக்கிறது. Mango தீவில் உள்ள ஒரு முழு கிராமமும் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.



Fonoifua தீவில் மொத்தமாக இரண்டே இரண்டு கட்டிடங்கள் மிஞ்சியுள்ளதாகவும், Namuka தீவில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mango, ஃபோனோஃபுவா மற்றும் அடாடா தீவுகளில் எஞ்சியுள்ள மக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றுவது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இறப்பும் காயங்களும் அதிக எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் தரப்பில் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். மொத்தம் 105,000 மக்கள் தொகை கொண்ட டோங்கா தீவு குறித்த பேரழிவுக்கு பின்னர், வெளியுலகில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.



இணையதள சேவைக்காக கடலுக்கடியில் நிறுவப்பட்டிருந்த அமைப்புகள் மொத்தமும் சேதமடைந்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. டோங்கா தீவில் இழப்புகள் குறைவாக கருதப்பட்டாலும், குட்டி தீவுகளில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் நிலை இதுவரை தெரியவரவில்லை.

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் மீட்பு கப்பல்கள் பாதிப்புக்கு உள்ளான தீவு பகுதிகளுக்கு விரைந்துள்ளன.



பிரதான தீவின் மேற்குக் கடற்கரையில், 56 வீடுகள் முழுமையாகவோ அல்லது மோசமாகவோ சேதமடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: