News Just In

11/07/2021 06:26:00 PM

10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு, கொவிட் தடுப்பு குழுவின் அனுமதிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் முதலான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும். கொவிட் பரவல் காரணமாக சுமார் 2 வருட காலமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இடைக்கிடையே மூடப்பட்டன.

கொவிட் பரவல் நிலையானது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆரம்பப் பிரிவு வகுப்புகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டன.

6 முதல் 9 வரையான வகுப்புகளுக்குப் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும், தவறவிடப்பட்ட பாட திட்டத்தினை முழுமைப்படுத்தல் மற்றும் பரீட்சைகளை நடத்துதல் என்பன தொடர்பிலும் தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது.

இதனிடையே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வருடத்தின் இறுதி பாடசாலை தவணையை, அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்குமாறு, தேசிய கல்வி நிறுவனத்தினால் கல்வி அமைச்சுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தவறவிடப்பட்ட பாட திட்டங்களை முழுமைப்படுத்துவதற்காகவும், பரீட்சைகளை நடத்துவதற்கான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை அதிகபட்சமாக 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: