News Just In

8/12/2021 03:39:00 PM

கொவிட் -19 அவசர சேவைப் பிரிவு திருகோணமலையில் ஆரம்பம்...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை நகராட்சி மன்றத்தின் கொவிட் - 19 அவசர சேவைப் பிரிவு நேற்று(11) ம் திகதி மதியம் அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம் உப தலைவர் கா.கோகுல்ராஜ் , செயலாளர் தெ.ஜெயவிஸட்ணு மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சுகாதார நடை முறையுடன் இந் நிகழ்வு இடம் பெற்றது. திருகோணமலை நகராட்சி மன்றத்தின் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் செயற்றிட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தியை வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்லும் செயற்றிட்டத்திற்காக 15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் தெ. ஜெயவிஸட்ணு கருத்து தெரிவிக்கும் போது இதன் செயற்பாடானது தினமும் சுகாதார திணைக்களத்தினால் வீட்டிலே சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விபரம் கிடைக்கப் பெற்று. அதனடிப்படையில் அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான சுகாதாரப் பொதி ஒன்றினை அனுப்பி வைப்பதுடன் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை சேவை வழங்குனர்களின் மூலம் பெற தொடர்பு ஏற்படுத்தல் அத்துடன் நகரசபை உத்தியோகத்தர்கள் அவர்களுடன் தொடர்பில் இருப்பார்கள் அதற்காக தீயணைப்பு படையின் அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

12 மணி நேரம் நகரசபை உத்தியோகத்தர்களும் மிகுதி 12 மணி நேரம் நகரசபை தீயணைப்பு படையும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். நலன் விரும்பிகளுடன் தொடர்புகளை பேணி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உணவு குடிநீர் என்பன பெற்றுக் கொடுக்கப்படும்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள கழிவுகளை அகற்ற தனி வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்படும் அத்துடன் 14 நாட்கள் நிறைவடைந்த பின்னர் அவ் வீடுகள் தொற்று நீக்கி தெளித்து கிருமி தொற்று நீக்கப்படும் என திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் தெ.ஜெயவிஸட்ணு தெரிவித்தார்.





No comments: