News Just In

7/26/2021 12:46:00 PM

இரசாயனங்களைத் தவிர்த்து நோயற்ற வாழ்வு வாழ சேதனப் பசளை முறையே சிறந்தது- விவசாயப் போதனாசிரியை முர்ஷிதாஷிரீன்!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
காணொளி- https://youtu.be/DtcILAITpKM
இரசாயனங்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழவும் தொற்றா நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்மெனில் நாம் முற்று முழுதாக சேதனப் பசளை விவசாய உற்பத்தி முறைக்குத் திரும்ப வேண்டும் என ஏறாவூர் நகர பிரதேச விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தெரிவித்தார்.

சுபீட்சத்தை நோக்கிய சௌபாக்கிய திட்டத்தின் கீழ் சேதன உர உற்பத்தியும் பாவினையும் நிகழ்ச்சியில் திரவ சேதன உர உற்பத்தி நிகழ்வு ஏறாவூர் சுவுக்கடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திங்கட்கிழமை 26.07.2021 இடம்பெற்றது.

கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய பண்ணை முகாமையாளர் யூ. நூஹுலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை முர்ஷிதாஷிரீன் இந்த நாட்டில் முழுக்க முழுக்க திண்ம சேதன உரத்தையும் மற்றும் திரவ நிலையில் பாவிக்கக் கூடிய திரவ சேதன உரத்தையுமே உற்பத்தி செய்து நஞ்சற்ற விவசாய உணவுப் பொருட்களை மக்கள் உண்ண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.

இரசாயன உரப்பாவனையில் பழகிப் போன நமது விவசாயிகளுக்கு இதுவொரு பாரிய சவாலான விடயமாக இருந்தாலும் விவசாயத் திணைக்களத்தினூடாக 2010ஆம் ஆண்டிலிருந்து நாம் நஞ்சற்ற இயற்கை விவசாய உற்பத்திக்கு விவசாயிகளைத் தூண்டி வந்துள்ளோம்” என்றார்.

அங்கு இடம்பெற்ற திரவ உர உற்பத்தி செய்முறை நிகழ்வில் கிளிசரியா மாட்டுச் சாணம்; உள்ளி வெல்லம் எரிக்கிலை அன்னாமின்னா (சீத்தா) இலை ஆகியவற்றின் கரைசல்களைச் சேர்த்து மண்புழு இட்டு ஏனைய கழிவு உணவுப் பொருட்கள் இலை குழைகள் கொண்டு சேதன திரவ உர உற்பத்தி செய்முறை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா மட்டக்களப்பு வடக்கு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஆர். லதாபிரியா கமநல சேவைகள் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். தேவரஜனி உள்ளிட்டோரும் பண்ணை விவசாயிகளும் கலந்து கொண்டனர்.













No comments: