News Just In

6/14/2021 06:13:00 PM

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம்- வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டால் கைது செய்ய உத்தரவு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் பொது கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (2021.06.14) திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடைகள், தனிமைப்படுத்தலில் உள்ள பிரதேசங்களை கண்காணிக்க பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை போதாமை, மாவட்டத்தின் வீதி ஓரங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்களை நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட பணித்தல், மீறுவோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தல், வீதிகளில் அரச உத்தியோகஸ்தர்கள் என அடையாள அட்டையை பயன்படுத்தி செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், சுகாதார பிரிவினரை தவிர ஏனைய அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தாங்கள் வேலை செய்யும் திணைக்கள அதிகாரிகளின் கடிதத்துடன் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்ல அனுமதித்தல் ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தல், வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வர்த்தகர்களை அனுமதித்தல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களின் நடமாட்டத்தை முற்றாக தடை செய்தல், வீதிகளில் அனாவசியமாக திரிவோரை கண்காணிக்க விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறிவிஜயசேன, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











No comments: