News Just In

11/08/2020 10:11:00 AM

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தனது வெற்றி உரையில் தாயை நினைவு கூர்ந்தார்!!


அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ், தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் டெலவர் நகரில் மக்களிடம் உரையாற்றினார்.

இதன் போது மேலும் தெரிவித்த கமலா ஹாரிஸ்,

என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி. வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி.

மக்கள் எமக்கு சிறந்த எதிர்காலத்திற்காக அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இது அமெரிக்காவுக்கு புதிய நாள்.

ஜனநாயகத்தை உருவாக்க உழைத்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் குரலுக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடனை தெரிவு செய்துள்ளீர்கள்.

எனது அம்மா தனது 19 வயதில் அமெரிக்காவுக்கு வந்து நிரந்தரமாக குடியேறினார். அப்போது அவர், நான் இந்த அளவுக்கு வருவேன் என்பதை நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். அதே சமயம், அமெரிக்காவின் ஜனநாயகத்தில் எதுவும் சாத்தியம் என்பதை அவர் நம்பினார்.

ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்.

துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல. இது தொடக்கம் தான். ஒரு பெண்ணை துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.

நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன. கடந்த 4 ஆண்டாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இன வெறியை அகற்றுவோம் என உறுதிபடக் கூறுகிறேன்.

பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் நம்பிக்கை, கண்ணியம், ஒற்றுமைக்கு வாக்களித்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

மேற்படி அவர் ஆற்றிய உரையினை பார்வையிட கீழ் உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

No comments: