News Just In

11/04/2020 10:31:00 AM

மன்னார்- இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலில் உயிரிழப்பு!!


மன்னார் - இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் 54 வயதுடைய கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த கிராம உத்தியோகத்தர், ஆத்திமோட்டை பகுதிக்கு சென்று நேற்றிரவு உந்துருளியில் திரும்பியபோது, காட்டுப்பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடுஅவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோம மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரிய வருகின்றது.
இதையடுத்து, பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தாக இலுப்பைக்கடவை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments: