News Just In

11/29/2020 10:40:00 AM

கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு; முழு விபரம்..!!


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய ஆணொருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உயர் குருதி அழுத்தம் மற்றும் கொரொனா தொற்று என்பனவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன் கொழும்பு 08 பகுதியை சேர்ந்ந 96 வயதுடைய மூதாட்டி ஒருவர் கடந்த 27ஆம் திகதி தமது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

அவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 96 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 61 முதல் 70 வயதுக்குட்பட்ட 20 பேரும், 51 முதல் 60 வயதிற்குட்பட்ட 16 பேரும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட 45 பேர் இதுவரை கொரோனா தொறணுறினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 81 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 13 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6 பேரும் குருணாகலை மாவட்டத்தில் 4 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 3 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 43 பேர் தமது விடுகளிலேயே உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் நபர்கள் வீடுகளிலேயே உயிரிழக்கும் சந்தர்ப்பங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட வைத்தியர்களை நடமாடும் சேவையொன்றின் ஊடாக, தனிமைப்படுத்தல் பகுதிகளில் விசேட ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும்போது, அவர்களின் வீட்டில் உள்ளவர்களில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு, அல்லது தொற்றுநோய் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனரா என்பதை ஆராயுமாறும் ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவும் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்படுவதன் காரணமாக பொதுசுகாதார பரிசோதகர்களினால் இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஆகவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானோருடன் நெருங்கிப் பழகியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய நாளில் மாத்திரம் 487 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 450 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கண்டி பொது வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் 6 தாதியர்கள் உள்ளடங்களாக 15 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கண்டி பொது வைத்தியசாலையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டுள்ளன.

இதேவேளை, அக்குரன பகுதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ள புலுகோதென்ன மற்றும் தெலம்புஹாவத்த ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 430 பேர் குணமடைந்த நிலையில் நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 223 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 531 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 2 ஆயிரத்து 832 PCR பரிசோலனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: