News Just In

9/24/2020 03:44:00 PM

வாழும் போதே வாழ்த்தப்படும் சோமசுந்தரம் சிவலிங்கம்!!


மாணிக்க விழாக்காணும் கல்லடியூரின் சிரேஷ்ட பிரஜையான சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்களை கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை, சங்காரவேல் பவுண்டேசன், கல்லடி விநாயகர் அறநெறி பாடசாலை என்பன இணைந்து 26.09.2020 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கல்லடியில் பாராட்டி கெளரவிக்க உள்ளது.

கல்லடியைச் சேர்ந்த சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்கள் சிவானந்தா வித்தியாலயத்தில் ஒரு விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றி, விஞ்ஞான உதவிக்கு கல்வி பணிப்பாளராக அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர். பிரதேச ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள், ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் என்பவற்றுடன் இணைந்து பல ஆக்கபூர்வமான பணிகளை பல காலம் முன்னெடுத்தவர். 1982 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தர வகுப்புகளுக்கு விஞ்ஞான ஆசிரியர்களின் தட்டுப்பாடு நிலவிய போது மாணவர்களை பல இடங்களில் ஒன்றிணைத்து அவர்களுக்கு இலவச பாட போதனைகளை முன்னின்று நடத்தியவர். தற்போது "சங்காரவேல் பவுண்டேசன்'' நிறுவனத்தின் தலைவராகவும் பணிபுரிகின்றார்.

கிழக்கு மாகாணத்தில் உயர் கல்வித்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கல்வியை தொடர நிதியின்றி அவதியுறும் மாணவர்களுக்கு இந்நிறுவனம் நிதி உதவியை வழங்கி வருகிறது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்பம் முதல் அவர்களின் பயிற்சி முடிவுறும் வரை நிதி வழங்கப்படுகிறது. இது வரை 68 பல்கலைக்கழக மாணவர்கள் சங்காரவேல் பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி உதவியைப் பெற்று கல்வியைத் தொடர்கின்றனர். 06 பேர் பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளியேறி உள்ளனர். 2013இல் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்பாட்டை திரு.சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்களே தலைமை தாங்கி நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மதிப்பிற்கும் கெளரவத்திற்குமுரிய சோமசுந்தரம் சிவலிங்கம் ஐயா அகவை 90க்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் அவர் நலமுடன் வாழ இறைவனை வேண்டி அவரை எமது ஊடக சேவை தலைதாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறது.

No comments: