News Just In

9/25/2020 05:53:00 AM

பல்கலைக்கழக மாணவர் அனுமதி மற்றும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தல் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட செய்தி!!


எதிர்காலத்தில் உலக பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்விச் சீர்திருத்தம் அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நடைமுறை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவில் புதிய பாடதிட்டங்களை அறிமுகப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டம் வழங்கும் நிறுவனங்களாக இருக்கக்கூடாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கல்வி அபிவிருத்து ஆகியவற்றின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இவ்வாறு குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்கு ஏற்றவாறான கல்வி சீர்திருத்தம் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை என்பதே தற்போதைய தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு துறைகளில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், கல்வி முறைமை அதற்குத் தேவையான மனித சக்தியை உருவாக்கவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் எதிர்கால சந்ததியினரை உற்பத்தித்திறன் கொண்டவர்களாக மாற்றுவதற்கு அவர்கள், புத்தாக்க அறிவு மற்றும் திறன்களுடன் வளர்க்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வித்துறையில் இளைஞர்கள் தொலைந்து போகாமல் இருப்பதற்கு முன்பள்ளி முதல் உயர் கல்வி வரை தெளிவான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமே தொழிநுட்ப கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோக்கங்களை அடைவதற்கு கல்வி தொடர்பான அனைத்து நிறுவனங்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, கல்வியை இடைநிறுத்திய அனைத்து மாணவர்களும் வயது வித்தியாசம் இன்றி மீண்டும் விரும்பிய கல்வியை தொடர்வதற்கு களம் அமைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சையை மையமாகக் கொண்ட கல்விக்கு பதிலாக மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தில் இருந்து 41 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், திறந்த பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments: