News Just In

5/08/2020 11:11:00 PM

டுபாயிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா! -காத்தான்குடி வைத்தியசாலை உட்பட கொரோனா சிகிச்சை நிலையங்கள்..


கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று இரவு 9.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் எந்த தொற்றாளரும் அடையாளம் காணப்படாத நிலையிலேயே இந்த எண்ணிக்கை நேற்று அடையாளம் காண்ப்பட்டவர்களால் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 393 பேர் கடற்படை வீரர்களாவர். அத்துடன் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கடற்படையினரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் ஆவர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரில் 16 பேர் இதுவரை பூரண சுகம் பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று இரவாகும் போது 240 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மேலும் 575 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 135 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 65 பேரும் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 404 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 393 பேர் வெலிசறை மற்றும் ரங்கல கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, கொழும்பில் இதுவரை 150 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நகருக்குள் மிக செறிவாக மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்கள், தோட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று அதன் ஒரு கட்டமாக , தெமட்டகொடை பகுதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத போதும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

தெமட்டகொடை மிஹிந்து சென்புர தொடர்மாடியில் இவ்வாறு 60 பேரின் மாதிரிகள் பெறப்பட்ட போதும் அவர்கள் எவருக்கும் கொரோனா இல்லை என இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று மருதானை டீன்ஸ் வீதி பகுதியில் சுமார் 70 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக தொடர்மாடிகள், தோட்டப்புர வீடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. அத்துடன், கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் சிலரும் அபாய வலய பகுதிகளில் கடமையாற்றும் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் சிலரும் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இதனிடையே டுபாயில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து யூ.எல். 303 விமானத்தினூடாக நேற்று ற்று முற்பகல் 197 பேர் நாட்டை வந்தடைந்தனர்.

டுபாயிலிருந்த இலங்கையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அங்கு வசித்து வந்த சிலரும் இதில் அடங்குகின்றனர். அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களுக்கான ஆரம்பக்கட்ட உடல் உஷ்ணத்தை அளவிடும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அந் நபருக்கு காய்ச்சல் நிலைமை உள்ளமை தெரியவரவே, குறித்த நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனைத் தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொடை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்டார். பிலியந்தலையை சேர்ந்த 44 வயதானவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

No comments: