News Just In

4/19/2020 06:34:00 PM

ஓட்டமாவடி எல்லைக்குள் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலைகள் தொடர்பான கலந்துரையாடல்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஓட்டமாவடி பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேசசபை எல்லைக்குள் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.டி.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் ஓட்டமாவடி, மீராவோடை வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் ஒருசில வர்த்தகர்கள் முறையற்ற ரீதியில் செயற்படுவதாகவும், ஒரு குறித்த சீரான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படாமை தொடர்பாகவும் தனக்கு தகவல்கள் கிடைப்பதாகவும், அந்த வகையில் நாட்டின் தற்போதைய சீரற்ற நிலமை மற்றும் மக்களின் நிலமைகளினை கருத்திற் கொண்டு

திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 22 வகையான மரக்கறிகளுக்கு விலையினை நிர்ணயம் செய்வதோடு இவ்விலையினை பின்பற்றியே மரக்கறி உரிமையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் நுகர்வோர் அதிகார சபையினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவிசாளர் ஐ.டி.அஸ்மி தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் இரண்டொரு தினங்களில் கோழி இறைச்சி விலையினை நிர்ணயித்து அக்குறிப்பிட்ட விலைக்கே கோழி இறைச்சியினை விற்பனை செய்ய வேண்டும் எனவும், இப்பிரதேச மக்களின் நலனுக்காக பல காத்திரமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்த உள்ளதாகவும் தவிசாளர் ஐ.டி.அஸ்மி மேலும் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் குறித்த விலையினை கடை பிடித்து மக்களின் நலனுக்காக உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குமாறும், இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் ஏகமனதாக எட்டப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னர் நாட்டின் பிரதான சந்தைகளில் மரக்கறி மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் நியாயாமான கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் அதிகார சபையின் வழிகாட்டலுடன் தீர்மானித்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஒலிபெருக்கி மூலமும், எழுத்து மூலமும் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அறிவிக்கப்படும்.

இப்பிரதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும் கட்டுப்பாட்டு விலையினை அனைத்துத் தரப்பினரும் முறையாக கடைப்பிடித்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிரதேச மக்களின் நலன் கருதியும், பொருட்களின் கட்டுப்பாட்டு விலையினை கருத்திற் கொண்டும் எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபையின் நடவடிக்கைகளுக்கு பிரதேச சபையும், வர்த்தக அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மனிக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.டி.அஸ்மி தெரிவித்தார்.

No comments: