அதன்படி, இன்று அதிகாலை 5.00 மணிக்கு மொனராகலை, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை நுவெரெலியா, மாத்தளை, குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா, காலி, மாத்தறை,மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை ஆகிய நிர்வாக மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதே காலப்பகுதியில் கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் அலவத்துகொடை, வரக்காபொலை, அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மட்டும் ஊரடங்கு நிலைமை மறு அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இந்நிலையில் மேல் மாகாணத்தில் உள்ள 111 பொலிஸ் பிரிவுகளில், 18 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் புதன்கிழமை 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
கொழும்பில் 11 பொலிஸ் பிரிவுகளையும், கம்பஹாவில் 3 பொலிஸ் பிரிவுகளையும், களுத்துறையில் 4 பொலிஸ் பிரிவுகளையும் தவிர்த்தே இவ்வாறு ஊரடங்கு குறித்த திகதியில் தளர்த்தப்படவுள்ளது.
இதனைவிட புத்தளம் மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கை புதன்கிழமை அதிகாலை 5.00 மணி முதல் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று 3 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ( தலவத்துகொட, வரக்காபொல, அக்கரைப்பற்று ) 21 மாவட்டங்களிலும், புதன்கிழமை 22 ஆம் திகதி 21 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து 4 மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்) ஊரடங்கு நிலைமை தளர்த்தப்படும்.
எனினும் நாட்டில் மறு அறிவித்தல் வரை 24 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
அத்துடன் பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படும் அனைத்து பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை தினந்தோறும் இரவு 8.00 மணி முதல் மறு நாள் அதிகாலை 5.00 மணி வரை 9 மணி நேர ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியது.
பிராந்திய சுகாதார பணிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய, அரசாங்கம் இது குறித்து கூடிய அவதானம் செலுத்தி மாவட்ட ரீதியிலும் பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்படும் விதமாக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து அத்தியாவசிய தேவைகள் மற்றும் தொழில் நிமித்தமான போக்குவரத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான வீதிகளில், அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார், ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தல் ஏதேனும் ஒரு பகுதியில் காணப்பட்டால் அந்த பகுதி உடனடியாக ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து கேசரியிடம் பொலிஸ் தலைமையகம் சார்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன, “ ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் , கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாய நிலை ஒன்று ஒரு ஊரில் அல்லது பிரதேசத்தில் ஏற்பட்டால் அந்த பகுதியை மட்டும் முடக்க அல்லது ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதியாக இருப்பினும் முடக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமொன்று அங்கு இருக்குமாயின் எக்காரணத்துக்காகவேனும் அந்த பிரதேசத்துக்குள் உள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியளிக்கப்படல் மாட்டது.
ஊரடங்கு தொடர்ந்தும் அமுல் செய்யப்படவுள்ள 24 பொலிஸ் பிரிவுகளிலும், அத்தியாவசிய தேவைகளுக்காக பிரதான வீதிகள் ஊடாக செல்ல அனுமதியளிக்கப்படும். அத்துடன் ஊரடங்கு நீக்கப்படும் பகுதிகளில் கூட, பிரதான வீதியானது தொழில் நிமித்தம் சென்றுவருவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படல் வேண்டும். மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், சமய விழாக்கள் போன்றவை மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
மறு அறிவித்தல்வரை ஊரடங்கு தொடரும் பொலிஸ் பிரிவுகள்:
கண்டி மாவட்டம்: அலவத்துகொட பொலிஸ் பிரிவு
கேகாலை மாவட்டம்: வரகாபொல பொலிஸ் பிரிவு
அம்பாறை மாவட்டம்: அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு
கொழும்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 58 பொலிஸ் பிரிவுகளில் 11 பொலிஸ் பிரிவுகளில் மட்டும் புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரவுள்ளது.
அதன்படி, கொழும்பு மத்தி பொலிஸ் வலயத்துக்குள் உள்ள 8 பொலிஸ் பிரிவுகளில் வாழைத்தோட்டம் , மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தளர்த்தப்படமாட்டாது.
எனினும் அந்த பொலிஸ் வலயத்தில் உள்ள புறக்கோட்டை, டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, கோட்டை, கொம்பனித் தெரு, மாளிகாவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிகு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
அத்துடன் கொழும்பு வடக்கு பொலிஸ் வலயத்தில் உள்ள 8 பொலிஸ் பிரிவுகளில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மட்டும் ஊரடங்கு மறு அறிவித்தல்வரை தொடரவுள்ளது.
அந்த பொலிஸ் வலயத்தின் துறைமுகம், கரையோரம், முகத்துவாரம், மட்டக்குளி, புளூமெண்டல், தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 22 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
அத்துடன் கொழும்பு தெற்கு பொலிஸ் வலயத்தில் உள்ள 8 பொலிஸ் பிரிவுகளில் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் மட்டும் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரவுள்ள நிலையில் கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை, வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், பொரளை மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும்.
அதேபோல் நுகேகொடை பொலிஸ் வலயத்தில் கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் கல்கிசை பொலிஸ் வலயத்தில் கல்கிசை, தெஹிவளை மற்றும் கொஹூவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
அவ்விரு பொலிஸ் வலயங்களிலும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.
கம்பஹா மாவட்டம்:
இதேபோல், கம்பஹா மாவட்டத்தில் உள்ள 37 பொலிஸ் பிரிவுகளில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே மறு அறிவித்தல் வரை ஊரடங்கு முதல் தொடரவுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் வலயத்தில் உள்ள 12 பொலிஸ் பிரிவுகளில் ஜா எல, பொலிஸ் பிரிவிலும் நீர்கொழும்பு பொலிஸ் வலயத்தில் உள்ள கொச்சிக்கடை, சீதுவை அகைய பொலிஸ் பிரிவுகளிலுமே ஊரடங்கு நிலைமை தொடரவுள்ளன.
இந்த மூன்று பொலிஸ் பிரிவுகள் தவிர அம்மாவட்டத்தில் உள்ள ஏனைய 34 பொலிஸ் பிரிவுகளிலும் 22 ஆம் திகதி ஊரடங்கு சட்டமானது அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
களுத்துறை மாவட்டம் :
களுத்தறை மாவட்டத்தின் 26 பொலிஸ் பிரிவுகளில் 4 பொலிஸ் பிரிவுகளை தொடர்ந்தும் ஊரடங்கு நிலைமையின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் பாணந்துறை பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 10 பொலிஸ் பிரிவுகளில் பண்டாரகம பொலிஸ் பிரிவினையும், களுத்துறை பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 16 பொலிஸ் பிரிவுகளில் பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளையுமே இவ்வாறு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நிலைமையின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் ஏனைய 22 பொலிஸ் பிரிவுகளிலும் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்.
புத்தளம் மாவட்டம்:
புத்தளம் மாவட்டத்தில் உள்ள 18 பொலிஸ் பிரிவுகளில் 3 பொலிஸ் பிரிவுகளிலேயே ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை அமுல் செய்யப்படவுள்ளது. அம்மாவட்டத்தின் புத்தளம் பொலிஸ் வலயத்தில் உள்ள 11 பொலிஸ் பிரிவுகளில் புத்தளம் பொலிஸ் பிரிவிலும் சிலாபம் பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 7 பொலிஸ் பிரிவுகளில் மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் மட்டும் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளது. இந்நிலையில் அம்மாவட்டத்தின் ஏனைய 15 பொலிஸ் பிரிவுகளிலும் எதிர்வரும் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
இவ்வாறு புதன்கிழமை 22 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் அனைத்து பகுதிகளிலும் நாளாந்தம் இரவு 8.00 மணி முதல் மறு நாள் அதிகாலை 5.00 மணிவரை தேவைக்கு ஏற்ப ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளது.
பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனையோர் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும். என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தனியார் நிறுவனங்களை காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்கும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.
பஸ் அல்லது புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கியமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக சென்றுவருவதை தவிர ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தனியார் நிறுவனங்களை காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்கும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.
பஸ் அல்லது புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கியமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக சென்றுவருவதை தவிர ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: