News Just In

1/20/2020 10:35:00 PM

'மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாட்டு மக்களுக்கு கேடு'-விழிப்புணர்வு கருத்தரங்கு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராகத் தொடங்கி தற்போது வரை விவாதப் பொருளாகியுள்ள மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தம் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு (Millennium Challenge Corporation - MCC) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை 19.01.2020 இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கே.லவகுசராசா தலைமையில் கொழும்பு கற்றலுக்கும் கலந்துரையாடலுக்குமான எக்குமெனிக்கல் நிறுவனத்தில் (Ecumenical Institute for Study and Dialog), இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், சமூக நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் வரைவும் அதன் உள்ளடக்கங்களும் அதன் மூலம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி விழப்புணர்வூட்டல் இடம்பெற்றது.

அத்தோடு சர்வதேச அரங்கில் ஏற்கெனவே இவ்வாறான அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை அமுல்படுத்தும் நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகளும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் பொருளாதார ஜனநாயகத்திற்கான கூட்டமைப்பு (Alliance for Economic Democracy) அமாலி வெதகெதர, காணி மற்றும் விவசாய மறுசீரமைப்புக்கான அமைப்பின் (Movement for Land Agriculture Reforms ) சஜீவ சமிகார, மற்றும் கேசர கோட்டேகொட உள்ளிட்ட இன்னும் பல துறைசார்ந்தோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

ஒட்டு மொத்தத்தில் இந்த அமெரிக்க நிதியளிப்பு மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெருத்த கேடு விளைவிக்கக் கூடியது என்றும் இதனை இலங்கையர்கள் அனைவரும் இன மத பேதமின்றி பலமாக எதிர்க்க வேண்டும் என்றும் இங்கு கருத்துக்கள் பகிரப்பட்டன.

No comments: