(ஸ்ரீ கிருஷ்னர்)
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இருப்பினும் இப்பரீட்சையை வேண்டாத ஒன்று என இலகுவாக புறந்தள்ளிவட முடியாது. இப்பரீட்சை மூலம் வசதிகுன்றிய மாணவர்கள் அரசின் நிதி உதவியைப் பெறுவதுடன் பின்தங்கிய பிரதேசங்களில் வளப்பற்றாக்குறையுடன் கல்வி பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்புமிடத்து வசதியான பாடசாலைகளைத் தெரிவு செய்யவும் இதன்மூலம் வாய்ப்புண்டு.
ஆண்டுதோறும் தேசிய ரீதியாக பரீட்சைக்குத் தோற்றும் முந்நூறாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களில் ஏறத்தாழ நூறாயிரம் மாணவர்கள் ஆரம்பப் பிரிவுக்கான உரிய தேர்ச்சிகளை அடையாததையும் அறிய முடிகின்றது.
ஒரு கட்டிடத்திற்கு அதன் அத்திவாரத்தின் பலம் எவ்வளவு இன்றியமையாததோ அந்த அளவுக்கு ஒரு மாணவனின் பாடசாலைக்கல்வி வரலாற்றில் ஆரம்பக்கல்வி அத்துனை முக்கியமானதாகும். வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இரு வினாத்தாளிலும் 70 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெறும் மாணவர் வீதம் ஏனைய மாகாணங்களின் மாணவர்களோடு ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளது.
இதன் அடிப்படையில் மாணவர்களை பட்டியற்படுத்தும்போது வடக்கு , கிழக்கு மாகாணங்கள் 8வது , 9வது இடத்தைப் பெறுகின்றன. உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் 4வது 5வது இடங்களைப் பெற்ற வடக்கு , கிழக்கு மாணவர்களின் கல்விப்பெறுபேறு தற்போது பின்னடைந்ததற்கான காரணம் என்ன? என்ற வினா மேலோங்கி எழுகின்றது!
மாகாண ரீதியாக கடந்த ஐந்து வருடப் பெறுபேற்றை நோக்கும் போது தேசிய ரீதியாக தென் மாகாணம் தொடர்ந்து முதலாவது இடத்திலும் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கடை நிலையிலும் காணப்படுவதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இரு வினாத்தாளிலும் 70 புள்ளிக்கு மேல் பெறும் மாணவர் வீதம் தேசிய ரீதியான பெறுபேற்றிலும் பார்க்கக் குறைவாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டப் பெறுபேற்றுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டம் , சிறந்த பெறுபேற்றை தேசிய ரீதியாக பெறும் குருநாகல் மாவட்டம் என்பவற்றின் பெறுபேறு தொடர்பாக அட்டவணை – 02 காட்டுகிறது.
தேசிய ரீதியான 25 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 24வது , 23வது இடங்களையே வகிக்கின்றது. குருநாகல் மாவட்டம் தொடர்ச்சியாக பெறுபேற்றின் அடிப்படையில் முதலாவது நிலையிலே காணப்படுகின்றது. இரு வினாத்தாளிலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெறும் மாணவர்களின் யாழ் மாவட்ட பெறுபேறு , தேசியமட்டப் பெறுபேற்றை அண்மித்து இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்ட பெறுபேறு ஏறத்தாழ 10% குறைவாகவே காணப்படுகின்றது.
இரு வினாத்தாளிலும் 70 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொடர்பான விபரங்கள் அட்டவணை – 03 இல் காட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களின் பெறுபேற்றுடன் தேசிய ரீதியாகக் காணப்படும் 99 கல்வி வலயங்களில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெறும் நிக்கவரட்டிய கல்வி வலயப் பெறுபேறும் இணைக்கப்பட்டு உள்ளது.
தேசிய ரீதியான 99 கல்வி வலயங்களில் கல்குடா , மட்டக்களப்பு மத்தி , மட்டக்களப்பு மேற்கு , பட்டிருப்பு என்பன பின்னடைந்து காணப்படுகின்ற போது மட்டக்களப்பின் நகரப்பகுதிப் பெறுபேறும் திருப்திகரமாகக் காணப்படவில்லை. தேசிய ரீதியான பெறுபேற்றில் தொடர்ச்சியாக முதலாம் இடத்தை நிக்கவரட்டிய கல்வி வலயம் பெறுகிறது.
இக்கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வியை திருப்திகரமாக நிறைவேற்றாத மாணவர் வீதம் ஏறத்தாழ 10% ஆகவே காணப்படுகின்றது. ஆனால் 2019 பெறுபேற்றின் பிரகாரம் மட்டக்களப்பு நகரில் இந்த வீதம் ஏறத்தாழ 26% ஆக உள்ளது. நிக்கவரட்டிய கல்வி வலயத்தில் ஆரம்ப பிரிவில் தொடர்ச்சியாக மிகச் சிறந்த பெறுபேற்றை அவர்கள் பெறுவதற்கு காரணமான காரணிகளை அறிந்து தமது மாணவர்களின் பெறுபேற்றை உயர்த்துவதற்காக கல்வித் திணைக்களம் முயற்சித்ததாகத் தெரியவில்லை.

No comments: