
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 12 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த வழக்கு நீதவான் பயாஸ் றஸாக் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பின்னர் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்விசாரணைகள் யாவும் நீதவானின் பிரத்தியேக அறையில் இடம்பெற்றது. இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்புத் தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகியிருந்தனர்.
பல மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments: