கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொதுவெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை மற்றும் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்துகொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எழுவர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அவர் சார்ந்திருந்த கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக எனக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்ட கையோடு, அவரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அவருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.
இதேபோன்று கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளரான பிலிப் பற்றிக் ரோசான் என்பவர் மீது அவர் சார்ந்திருந்த கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக எனக்குத் தெரியப்படுத்தியமைக்கு அமைவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்டதன் பேரில், அவரின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அவருக்கும், உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.
அத்தோடு, மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான இரா.அசோக், யூசைமுத்து பிலிப் மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர் தோமஸ் சுரேந்தர் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான வ.சந்திரவர்ணன், சி.சிவானந்தன் போன்றோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சித் தலைமையின் நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்களது பதில்களுக்கு அமைய அவர்களது உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவங்களும் இழக்கச் செய்து அவர்களின் வெற்றிடத்திற்காகப் புதியவர்கள் நியமனம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன், மேற்படி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி கோணேஸ்வரநாதன் என்பவரின் இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவதோடு அவரின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அவருக்கும், உரிய தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்தை நிரப்பும் முகமாக புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரான குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் மீதான ஜனாதிபதி தேர்தல் விடயம் உட்பட கட்சி ஒழுக்கவிதி மீறல் குற்றங்களின் அடிப்படையில் அவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் பொறுப்புக்கள் பதிவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்படி நடவடிக்கைகள் உரிய பிரதிநிதிகளின் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலும், கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்றே கடந்த வாரங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பா.முரளிதரனின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவமும் இழக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: