News Just In

12/24/2019 07:15:00 PM

கிழக்கில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்காக அமைப்பினை உருவாக்குவதே எனது இலக்கு - சாணக்கியன்

தமிழினத்தின் விடிவுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு விசேட தேவையுடையோராக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வினை அளிக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன். முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்காக வடக்கில் உள்ள “உயிரிழை” அமைப்பினைப் போன்று கிழக்கிற்கும் ஓர் அமைப்பினை உருவாக்குவதே தனது எதிர்கால இலக்கு என்றும் தெரிவித்தார்.

அன்மையில் மாங்குளத்தில் இயங்கிவரும் “உயிரிழை” அமைப்பிற்குச் சென்ற இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் பயனாளிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினாலும், பல்வேறு விபத்துக்களாலும் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் வட கிழக்கில் 204 பேர் உள்ளதாகவும், அதில் பத்து பேர் தங்களின் உயிரிழை முகாமில் இருப்பதாகவும் ஏனையவர்கள் தத்தம் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழை அமைப்பின் தலைவர் சிறிகரன் அவர்களின் ஊடாக அறியக்கிடைத்தது.

குறிப்பாக தமிழ் மக்களுக்காக போராடி விழுப்புண் அடைந்து இளைமையிலே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் பலர் எமது பகுதிகளில் உள்ளார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரம் உட்பட நல்வாழ்விற்கான ஒத்தாசைகளை வழங்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

அதேபோல் தமிழினத்துக்காக போராடி தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் உண்மையிலே போற்றப்பட வேண்டியவர்கள். தங்களது உயிரை துச்சமாக நினைத்து எம்மினத்துக்காக களமாடியவர்களையும் நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

இதன் ஒருகட்டமாக வடக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்காக இந்த உயிரிழை அமைப்பு செயற்பட்டுவருவது போல் இவ்வாறு கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக ஓர் அமைப்பினை உருவாக்குவதே தனது இலட்சியம் எனவும் தனது எதிர்கால திட்டத்தில் இதனை ஓர் முதன்மைச் செயற்பாடாக இணைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, மாங்குளத்தில் இயங்கிவரும் மேற்படி “உயிரிழை” அமைப்பின் செயற்பாட்டிற்காக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் சார்பில் நிதியுதவிகளையும் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.



No comments: