
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உலக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிலைபேறான உணவுப் பாதுகாப்பு அளவீட்டு செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் திங்கட்கிழமை 30.12.2019 மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடலில் உணவு பாதுகாப்பு, விவசாய, மீன்பிடி அத்துடன் அதற்கு மேலதிகமான உணவுகள் தொடர்பான நிலைபேறான உணவு பாதுகாப்பு அளவீட்டு செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றி ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய நிதி பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. மகேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் பிரேமலால் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவினர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியதுடன் பரஸ்பர கருத்துக்களையும் அறிக்கைப்படுத்தினர்.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பு செயல்திட்டம் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக இத்திட்டத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முடிந்திருக்கவில்லை.
அதனால், தற்போது வடகிழக்கு மாகாணங்களில் போர் முடிவடைந்துள்ள நிலையில் உலக உணவு பாதுகாப்பு செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஏதுவான கருத்துக்களை துறைசார் திணைக்கள அதிகாரிகள் மூலமாக அறிந்து கொள்ளும் வகையில் பரஸ்பர கருத்தறியும் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
உலக உணவு பாதுகாப்பு செயல்திட்டத்திற்கான நிலைபேறான இலக்குகளை அடைந்து தேசிய மட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச மட்டத்தில் பெறப்படும் கருத்துக்கள் உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




No comments: