கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 422 ஆசிரியர்கள் உள்வாங்கப்படுகிறார்கள். அவர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக கவ்விப்பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் தமது இடமாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தபோதிலும், பல ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவைகள், இடமாற்றத்துக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. நிராகரிக்கப்பட்டமைக்கு அதுவே காரணமாகும்.
இடமாற்றம் பெறுகின்ற ஆசிரியர்களின் முழுவிபரங்களும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கான இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதிலிருந்து தமக்குத் தேவையான தகவல்களை ஆசிரியர்கள் பெற முடியும். இடமாற்றம் பெறுவோர் தங்களுக்கான இடமாற்றக் கடிதங்களை தற்போது கடமையாற்றும் வலயக் கல்விப் பணிமனையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய பாடசாலையில், அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்பதாக, கடமையிலுள்ள பாடசாலைக்குரிய ஆவணங்களையும் பொருட்களையும் அதன் அதிபரிடம் ஒப்படைத்துவிடல் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

No comments: