இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். இந்த அமைச்சரவையில் முதல் முறை எம்.பி.யாகி உள்ள தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம் பெற்றுள்ளார். இவர் அங்குள்ள ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே தொகுதியில், இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. அரசியல் சட்ட முடியாட்சி (Constitutional Monarchy) முறையை அடிப்படையாக கொண்ட இந்த நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட மக்களவை மற்றும் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களை கொண்ட செனட் சபை முதலிய இரட்டை அமைப்பை இந்த நாடு கொண்டுள்ளது.
கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்களவை பொதுத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடைசியாக 2015ஆம் நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 184 பேர் வெற்றிபெற்றிருந்தனர்.
கனடாவில் ஒரு இந்துப்பெண் எம்.பி. ஆகி இருப்பது இதுவே முதல் முறை. இவரது தந்தை டாக்டர் சுந்தரம் விவேகானந்த் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ஆவார். தாயார் டாக்டர் சரோஜ், மயக்க மருத்துவ நிபுணர் ஆவார். கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967-ம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங்குள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றியவர் ஆவார். ஜான் என்ற கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
அனிதா ஆனந்த் மந்திரி ஆகி இருப்பது உலகமெங்கும் வாழும் தமிழ்ப்பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்து நாகரிகத்தின் கனடா அருங்காட்சியகத்தின் தலைவர் பதவியையும் அனிதா ஆனந்த் வகித்துள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 7 அமைச்சர்களில் அனிதா ஆனந்த் ஒருவர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் 3 பேருக்கு ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சர பதவி அளித்துள்ளார். அவர்கள் 3 பேரும் சீக்கியர்கள் ஆவார்கள். மேலும் அவர்கள் முன்னைய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தவர்கள். அவர்களில், ஹர்ஜித் சிங் சாஜனுக்கு (வயது 49) ராணுவ அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் முந்தைய அமைச்சரவையிலும் ராணுவ அமைச்சு பதவியிலும் இருந்ததமை குறிப்பிடத்தக்கது. நவ்தீப் பெயின்ஸ் (42), கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆகி இருக்கிறார். பர்தீஷ் சாக்கர்(39), பன்முகம், உள்ளடக்கம், இளைஞர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில், 'புதிய அமைச்சரவை வலுவான, திறமையான அணி ஆகும். நிறைய பணிகள் காத்திருக்கின்றன. கனடாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' என குறிப்பிட்டிருக்கிறார்.

No comments: