(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
புதிய தலைவரின் ஆட்சிப் பொறுப்பில் சிறுபான்மை இனங்கள் அச்சமடையாமல் நிம்மதியாக பொருளாதார அபிவிருத்தியோடு வாழலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்.எம். முஹம்மத் சுஐப் தெரிவித்தார்.
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ பதிவியேற்றுக் கொண்டதையடுத்து சுஐப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 30 வருட யுத்தக் கெடுபிடியினால் உருவான அச்சம், மரண பயம், இனப்படுகொலைகள் என்பனவற்றை இல்லாதொழித்து கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அனுபவஸ்தர்களின் கைகளில் ஆட்சித் தலைமைப் பொறுப்பை மக்கள் அமோக ஆதரவுடன் ஒப்படைத்திருக்கிறார்கள்.
எனவே, நிருவாகத் திறமையும், பொறுப்பும், தேசத்தின் மீது அக்கறையும் கொண்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் இனி இந்த நாட்டில் இழப்புக்களும், இனக் குரோதங்களும், வெறுப்புக்களும், அழிவுகளும் மேலோங்க இடமளிக்கமாட்டார்கள்.
அந்த வகையில் அநாவசிய நடவடிக்கைகள், நிறுத்தப்பட்டு இந்த நாட்டில் இனி ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கபப்டும் என்று உறுதியாக நம்ப முடியும்.
செயற்திறன் மிக்க ஆட்சியாளர்கள் சீர்குலைவு ஏற்படுவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
அதன் காரணமாக சிறுபான்மை இனங்கள் அச்சமின்றி வாழலாம் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.
அதேவேளை வெறுப்பூட்டும் பேச்சுக்களைப் பேசுவோரும், இனக்குரோதங்களை வளர்ப்போரும் இனிமேல் தங்களது அரசியலுக்கான அடித்தளத்திலிருந்து ஆட்டம் காண்பதும் உறுதியாகி விட்டது.
எதிர்வரும் தசாப்தங்களில் இனம் மொழி மதம் சார்ந்து இலங்கையர்கள் பிரிந்திருக்க வேண்டியதில்லை. இணைந்து அபிவிருத்தி கண்டு பொருளாதார வளர்ச்சிடையவதற்கு மொட்டு அணியினர் முன்னின்று வழிகாட்டுவார்கள்.
அடுத்துவரும் தசாப்தங்கள் அச்சமின்றி வாழும் காலங்களைப் பறைசாற்றும்' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது,

No comments: