News Just In

11/18/2019 10:24:00 PM

மட்டக்களப்பில் இனம் மதம் கடந்து விளையாட்டு துறைக்கு சேவையாற்றிய என்.ரி.பாறூக் காலமானார்


இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும், இலங்கை உதைப்பந்தாட்ட நடுவர் சங்க உறுப்பினரும் காத்தான்குடி லீக் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான என்.ரி.பாறூக் (55 வயது) இன்று (18) திங்கட்கிழமை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மக்கள் வங்கியின் உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி மக்கள் வங்கிக்கு சென்று கொண்டிருந்த போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனேயே களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது இரண்டாவது தடவையாகவும்  மாரடைப்பு ஏற்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார்.

அக்கறைப்பற்றை பிறப்பிடமாக கொண்ட மேற்படி பாறூக் மட்டக்களப்பு மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் உதைபந்தாட்ட விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்த பாடுபட்டவர்.

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும், இலங்கை உதைப்பந்தாட்ட நடுவர் சங்க உறுப்பினரும் காத்தான்குடி லீக் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமாகவும் தற்போது பதவி வகித்து வரும் பாறூக் மட்டக்களப்பில் மக்கள் வங்கியில் மிக நீண்ட காலமாக கடமையாற்றி வருவதால் காத்தான்குடியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் காத்தான்குடி சண்றைஸ் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து உதைபந்தாட்டப் போட்டிகளில் பிரகாசித்த இவர் அக் கழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார்.

ஆரம்பத்தில் இவர் ஒரு சிறந்த மெய்வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார். இலங்கையின் உதைபந்தாட்ட வீரர்களுடன் நெருக்கமான உறவுடன் காணப்பட்ட பாறூக் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் மதம் கடந்து அனைத்து சமூகங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றிருந்தார்.

சிறந்த ஆங்கில தமிழ் அறிவிப்பாளரான பாறூக் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் அறிப்பாளராக இருந்துள்ளார்.

இவரின் இழப்புக்குறித்து மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள உதைபந்தாட்ட வீரர்கள் விளையாட்டுக்கழகங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம்  நாளை (19) அக்கரைப்பற்றில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: